பைக்கில் சென்ற காவலரை கீழே தள்ளிய போக்குவரத்து ஆய்வாளர் இடமாற்றம்-வீடியோ

 

பைக்கில் சென்ற காவலரை கீழே தள்ளிய போக்குவரத்து ஆய்வாளர் இடமாற்றம்-வீடியோ

விடுப்பு கேட்ட போக்குவரத்து காவலரை கீழே தள்ளிய போக்குவரத்து ஆய்வாளர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

சென்னை: விடுப்பு கேட்ட போக்குவரத்து காவலரை கீழே தள்ளிய போக்குவரத்து ஆய்வாளர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தேனாம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் பணி புரியும் தருமன் என்ற காவலர் தன் தாயின் ஈமச்சடங்கிற்கு செல்ல கடந்த 21-ம் தேதி விடுப்பு கேட்டபோது ஆய்வாளர் ரவிச்சந்திரன் விடுப்பு தர மறுத்துள்ளார். இதையடுத்து, ஆய்வாளர் ரவிச்சந்திரன் விடுப்பு தர மறுப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தன் வயர்லஸ் மூலம் தகவல் கூறினார்.

இதனால், கடுப்பான ஆய்வாளர் ரவிச்சந்திரன், காவலர் தருமன் வீட்டிற்கு போகும் வழியில் காத்திருந்து, அவர் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வரும் போது, கையை பிடித்து இழுத்து கீழே தள்ளி பழிக்குபழி வாங்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த தருமனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர் மதுபோதையில் இருந்ததாக சான்று வாங்கி, அவரை பணியிட மாற்றம் செய்வதற்கும் காரணமாக இருந்துள்ளார்.

இதுகுறித்து தருமன் கூறும் போது, நான் பைக்கில் செல்லும் போது பின்னால் இருந்து இழுத்ததால் சாலையில் விழுந்தேன். அதன்பின் ரோந்து வாகனத்தில் ஏற்றினர். தலையில் காயம் ஏற்பட்டதால் என்ன நடந்ததென்று தெரியவில்லை. அரை மயக்கத்தில் இருந்தபோது மது ஊற்றினர். மயக்கம் தெளிந்த நிலையில் கண் விழித்து பார்த்த போது மருத்துவமனையில் இருந்தேன் என்றார். எனவே, ஆய்வாளர் ரவிச்சந்திரன் வேண்டுமென்ற தருமன் வாயில் மது ஊற்றினாரா என்ற சந்தேகம் எழுந்தது.

இதனிடையே, தருமனை, ஆய்வாளர் ரவிச்சந்திரன் கீழே தள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பான காட்சிகளை வைத்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுமட்டும் அல்லாமல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மீது இதற்கு முன் பல்வேறு புகார்கள் கொடுத்தும், அவர் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரனை ஆயுதப்படைக்கு மாற்றி போக்குவரத்து கூடுதல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.