பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் சில நாட்களில் ஆளுநர் முடிவு

 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் சில நாட்களில் ஆளுநர் முடிவு

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் தன்னுடைய முடிவை சில தினங்களில் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் தன்னுடைய முடிவை சில தினங்களில் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம். அவர்களது விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அனைத்து அதிகாரமும் தமிழக அரசுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

rajivconvicts

பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் நிறைவற்றப்பட்ட சிறப்புத் தீர்மானத்தை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல், அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அதையடுத்து செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆணையிடும்படி ஆளுனருக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றியது. அதன் மீது ஆளுனர் மாளிகை இந்நேரம் முடிவெடுத்து 7 தமிழர்களையும்  விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரு மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், 7 தமிழர்கள் விடுதலை குறித்து ஆளுனர் மாளிகை தாமதித்து வருகிறது.

modipurohit

இந்நிலையில் நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி பயணமானார். நேற்று மாலை 05.30 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது மேகேதாட்டு அணை குறித்து பிரதமரிடம் அவர் விளக்கியதாக தெரியவந்துள்ளது. பிரதமரை சந்தித்த பின்பு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து பன்வாரிலால் புரோஹித் பேசினார். அப்போது விவாதிக்கப்பட்டவைகள் குறித்து விரிவான அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதனிடையே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை தொடர்பாக, சென்னை திரும்பிய ஒரு சில நாட்களில் ஆளுநர் தன்னுடைய முடிவை அறிவிப்பார் ஆளுநர் மாளிகை வட்டார தகவல்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி வருகின்றன.