பேரறிவாளனுடன் ரஜினி எப்போது பேசினார் தெரியுமா? அமீர் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்

 

பேரறிவாளனுடன் ரஜினி எப்போது பேசினார் தெரியுமா? அமீர் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்

சென்னை: பேரறிவாளனுடன் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் பேசியது தொடர்பான சுவாரஸ்ய தகவலை இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி, முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை யார்? என கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக தன் போயஸ் கார்டன் இல்லம் முன்பு செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றி எனக்கு தெரியாது என்பது போன்ற மாயை சிலர் உருவாக்கி வருவதாகவும், கேள்வியை தெளிவாக கேட்டிருந்தால் பதிலளித்திருப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

அதேபோல், பேரறிவாளன் பரோலில் வந்திருந்த சமயத்தில் அவருடன் தான் தொலைபேசியில் பேசியதாகவும் நடிகர் ரஜினி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இயக்குநர் அமீர் அளித்துள்ள பேட்டியில் பேரறிவாளனிடம் தொலைபேசியில் ரஜினி பேசிய நிகழ்வு குறித்து விவரித்துள்ளார்.

அந்த பேட்டியில், “பேரறிவாளன் இல்லத்திற்கு சென்று விட்டு சென்னை நோக்கி நானும் மற்றொரு இயக்குநரும் வந்து கொண்டிருந்தோம். அப்போது பேரறிவாளன் என்னை அழைத்து, ரஜினி சாரிடம் இந்த விஷயம் தொடர்பாக பேச வேண்டும் என கேட்டுக் கொண்டார். உடனே காலா படப்பிடிப்பில் இருந்த ரஜினியை இயக்குநர் சமுத்திரகனி மூலம் தொடர்பு கொண்டேன். அவரும் பேரறிவாளனுடன் பேசுவதற்கு ஒப்புக் கொண்டு, உடனே தொலைபேசியில் அழைத்து பேசினார். 7 பேர் விடுதலைக்கு தான் குரல் கொடுப்பதாகவும் பேரறிவாளனிடம் வாக்குறிதி அளித்தார். ஆனால், அதுகுறித்து அவர் பின் நாட்களில் பேசவில்லை” என அமீர் தெரிவித்துள்ளார்.