பேய்க்கும் பேய்க்கும் (வரி) சண்டை – அதை உலகமே வேடிக்கை பார்க்குது

 

பேய்க்கும் பேய்க்கும் (வரி) சண்டை  – அதை உலகமே வேடிக்கை பார்க்குது

அமெரிக்காவும் சீனாவும் தங்களின் வரிச் சண்டையில் அடுத்த இன்னிங்கஸை துவங்கி உள்ளன

அமெரிக்காவும் சீனாவும் தங்களின் வரிச் சண்டையில் அடுத்த இன்னிங்கஸை துவங்கி உள்ளன. சில மாதங்களாக விலக்கி வைக்கப்பட்டிருந்த இந்த வரி உயர்வை மதிக்காமல், அமெரிக்கா ஒன்றரை லட்சம் கோடி ரூவாய்க்கான சீன பொருட்களுக்கு வரியை பத்து சதவீதத்துல இருந்து 25 சதவீதமா உயர்த்தியது. அதற்கு பதிலடியாக சீனா “எங்ககிட்டயும் சீப்பு இருக்கு, இங்கேயும் பரட்டைதான்”னு சொல்லி, பதிலுக்கு அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 42,000 கோடி ரூபாய் மதிப்புள்ள‌ பொருட்க‌ளுக்கு வ‌ரியை உயர்த்தி பதிலடி தந்துள்ளது

america

அடுத்த வருஷம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல். இதே நம்ம ஊரா இருந்தா, ஒவ்வொரு வீட்டுக்கும் ஆறாயிரம் தர்றோம்னு வாக்குறுதி தந்து ரெண்டாவது முறையும் வந்திரலாம். ஆனா, ட்ரம்ப் இருக்குறது அமெரிக்கா. அங்கே இதெல்லாம் செல்லுபடியாகாது. முன்னாடி ஒபாமா ரெண்டாவது வாட்டி ஜெயிக்கிறதுக்காக, சரியா காத்திருந்து பின்லேடனை தூக்கிக் கொண்டு போய் ஜல சமாதி செஞ்சுட்டு அதையே ஓட்டா மாத்தி ரெண்டாவது வாட்டியும் ஜெயிச்சார். அதுபோல, இந்தவாட்டி அதைவிட‌ பெருசா ஒரு வெற்றி வேணும்கிறதுக்காக, சீனாவை மனசுல வச்சுகிட்ட ட்ரம்ப் எல்லாத்துக்கும் தயாரா இருக்காப்டி. ” உன்னால முடிஞ்சத நீ பாரு, என்னால ஆனதை நான் பாக்குறேன்”னு ட்ரம்ப் சொல்ல, “இதுவரைக்கும் யாரும் என் மேல இவ்வளவு வரி விதிக்கலை” என சீனா பம்ம, “மூணு மாசத்துக்கு முந்திதானே உனக்கு எக்ஸ்ட்ரா டேக்ஸ் போட்டேன்”னு கட்டதுரை ட்ரம்ப் கெத்து காட்ட, “அது போனவாட்டி, இந்த வாட்டி முடியாது” என சொல்லி கொண்டிருக்கும்போதே, 25% வரி உயர்வுன்னு அமெரிக்கா நச்சென தலையில் அடிக்கிறது. வேணாம், வலிக்கிது என குறைந்தபட்ச எதிர்ப்பை சீனா காட்டினாலும், அவர்களையும் குறைத்து மதிப்பிட முடியாது.

america

ஏம்ப்பா, நாங்க ரெண்டு பேரும் ஆறு மாசமா இங்க‌ முட்டிகிட்டு இருக்கோம். இந்த‌ ஐ.நா, இல்லன்னா சர்வதேச நிதியம்னு யாராச்சும் ஒருத்தர் வந்து சண்டைய விலக்கி விடப்பிடாதா என இருவருமே எதிர்பார்த்திருக்கும் வேளையில், ஜப்பானில் அடுத்த மாதம் ஜி20 நாடுகளின் மாநாட்டில் ட்ரம்ப்பும் ஜின்பிங்கும் சந்தித்து வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதாக வந்திருப்பது நல்ல செய்தி. ஆனால், அவர்கள் இருவரும் ஏற்கெனவே ஒரு ரவுண்ட் பேசி முடித்திருந்தாலும், அது பயன் தரவில்லை என்பது கெட்ட செய்தி.