பேனர் விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு…… பா.ஜ.க. அரசுக்கு பின்னடைவு…

 

பேனர் விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு…… பா.ஜ.க. அரசுக்கு பின்னடைவு…

உத்தர பிரதேசத்தில் குற்றவாளிகள் பேனர் விவகாரத்தில், பேனரை அகற்ற வேண்டும் என்ற அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் பெயர், போட்டோ உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பேனர்களை உடனடியாக நீக்கும்படி அம்மாநில அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. ஆனால் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு அதனை அகற்றவில்லை. 

உச்ச நீதிமன்றம்

மேலும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெஷல் லீவ் மனுவை (எஸ்.எல்.பி.) உத்தர பிரதேச அரசு தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் யு.யு. லலித் மற்றும் அனிருத்தா போஸ் அடங்கிய விடுமுறை அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது உத்தர பிரதேச அரசு சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், எந்த சட்டத்தின்கீழ், உ.பி.யில் கலவரர்காரர்களின் தனிப்பட்ட தகவல்களை அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டது என நீதிபதி அனிருத்தா போஸ் கேள்வி கேட்டார்.

பேனர்

அதற்கு துஷா மேத்தா, ஒரு போராட்டத்தின்போது துப்பாக்கியை பயன்படுத்தியவர் மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுபவர் தனியுரிமைக்கு உரிமை கோரா முடியாது என தெரிவித்தார். இதனையடுத்து இது போன்ற நடவடிக்கைகளுக்கு (குற்றம்சாட்டப்பட்டவர்களின் விவரங்கள் அடங்கிய பேனர் வைப்பது) ஆதரவாக எந்தவொரு சட்டமும் இல்லை. இந்த விவகாரத்தில் மேலும் விரிவாக்கம் மற்றும் பரிசீலனை தேவை என்பதால் இந்த மனு விசாரிக்க பெரிய அமர்வுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும் அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது உத்த பிரதேச அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.