பெற்றோர் கண் முன்னே ரயிலில் சிக்கி உயிரிழந்த மகன்: நெஞ்சை உருக்கும் சம்பவம்

 

பெற்றோர் கண் முன்னே ரயிலில் சிக்கி உயிரிழந்த மகன்: நெஞ்சை உருக்கும் சம்பவம்

பெற்றோரை ரயிலில் ஏற்றி விட்டு ஓடும் ரயிலிலிருந்து இறங்கிய மகன் எதிர்பாரா விதமாக கீழே விழுந்து பெற்றோர் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு: பெற்றோரை ரயிலில் ஏற்றி விட்டு ஓடும் ரயிலிலிருந்து இறங்கிய மகன் எதிர்பாரா விதமாக கீழே விழுந்து பெற்றோர் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் விக்ரம் விஜயன் பெங்களூரில் ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரை பார்ப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது பெற்றோர் பெங்களூரு வந்திருந்தனர். சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக பெற்றோர் யஷ்வந்த்பூர் -கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், பெற்றோரை வழியனுப்ப விக்ரம் விஜயனும் கடந்த திங்கட்கிழமை கார்மெலார்ம் ரயில் நிலையத்துக்கு வந்திருந்தார். இரவு 8.56 மணியளவில் ரயில் ப்ளாட்ஃபார்முக்கு வந்தது. அந்த ரயில் நிலையத்தில் ரயிலானது 2 நிமிடங்கள் மட்டுமே நிற்பது வழக்கம். இதற்கிடையே விக்ரம் விஜயன் பெற்றோருடன் ரயிலில் ஏறி, அவர்களின் இருக்கையில் லக்கேஜ்களை வைத்துவிட்டு திரும்புவதற்குள் ரயில் புறப்பட்டுவிட்டது.

இதனையடுத்து பெற்றோரிடம் பார்த்து பத்திரமாக செல்லுங்கள் என கூறிவிட்டு ஓடும் ரயிலில் இருந்து அவசர அவசரமாக விக்ரம் இறங்கினார். ஆனால் அவர் ரயில் செல்வதற்கு எதிர்திசையில் இறங்கியதால் நிலை தடுமாறி ஓடும் ரயிலில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனது மகன் தன் கண் முன்னாலேயே இப்படி ரயிலில் சிக்குவதை பார்த்த விக்ரமின் தந்தையும் ஓடும் ரயிலில் இருந்து குதித்தார். அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட சக பயணிகள் செயினை இழுத்து ரயிலை நிறுத்தினர். விக்ரமின் தந்தை பலத்த காயங்களுடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பலத்த சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.