பெரும் பிரச்னையில் எடப்பாடி… பிரித்து மேய்ந்ததில் சிக்கல்..!

 

பெரும் பிரச்னையில் எடப்பாடி… பிரித்து மேய்ந்ததில் சிக்கல்..!

எம்.பி., தொகுதிப்படி பிரித்தால் மட்டுமே நிர்வாகம் வசதிப்படும் என்கிறது அதிகாரிகள் வட்டாரம். பிரச்னையை சமாளித்து எப்படி மாவட்டம் பிரிப்பு அறிவிப்பை வெளியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு, நெல்லையை பிரித்து தென்காசி, வேலூரை பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என வரிசையாக 5 புதிய மாவட்டங்களை அடுத்தடுத்து தமிழக அரசு அறிவித்தது.  

இதையடுத்து மயிலாடுதுறை, ஆரணி, செய்யாறு, அரக்கோணம் ஆகிய பகுதிகளையும் மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி நாள் தோறும் போராட்டங்கள் உருவெடுத்துள்ளன. நெல்லையை பிரித்து தென்காசி என தனி மாவட்டம் அறிவிப்பை  தொடர்ந்து எந்த தாலுகாவை நெல்லையில் சேர்ப்பது, தென்காசியில் சேர்ப்பது என்பது அதிகாரிகளுக்கு தலைவலியாக மாறி விட்டது.

சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாக்களை புதிய மாவட்டமான தென்காசியில் சேர்ப்பதை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். ஆளுங்கட்சியினரும் இந்த பகுதியை புதிய மாவட்டத்தில் சேர்ப்பதை விரும்பவில்லை. வைகோவும்  அவரது பகுதியை தென்காசியில் சேர்ப்பதை ரசிக்கவில்லை. இந்த இரண்டு தாலுகாக்களும் தென்காசியில் சேர்க்காமல் போனால் மாவட்ட பிரிவினை என்பதே அர்த்தம் இல்லாமல் போய் விடும் என்கின்றனர் அதிகாரிகள். 

இதனால், எந்த  தாலுகாவை தென்காசியில் சேர்ப்பது, எதை நெல்லையில் சேர்ப்பது என்பது அதிகாரிகளுக்கு பெரும் குடைச்சலாக மாறி உள்ளதாம். எம்.பி., தொகுதிப்படி பிரித்தால் மட்டுமே நிர்வாகம் வசதிப்படும் என்கிறது அதிகாரிகள் வட்டாரம். பிரச்னையை  சமாளித்து எப்படி மாவட்டம் பிரிப்பு அறிவிப்பை வெளியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.