பெரும்பான்மையை நிருபிக்க போராடும் சிவ சேனா! வாழ்த்து சொன்ன பா.ஜ.க.! பரபரப்பான மகாராஷ்டிரா அரசியல் களம்…..

 

பெரும்பான்மையை நிருபிக்க போராடும் சிவ சேனா! வாழ்த்து சொன்ன பா.ஜ.க.! பரபரப்பான மகாராஷ்டிரா அரசியல் களம்…..

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக சிவ சேனா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பா.ஜ.க. வாழ்த்து தெரிவித்துள்ளது.

மகாராஷ்ராவில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்து புதிய அரசு அமைவதற்கான கால கெடு முடிவடைந்த பிறகும் எந்தவொரு  கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோராததால், அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யரி சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கினார். தேர்தலில் அதிக இடங்களை வென்ற தனிப்பெரும் கட்சியான பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க வருமாறு கடந்த சனிக்கிழமையன்று கவர்னர் அழைப்பு விடுத்தார்.

சிவ சேனா

ஆனால், பெரும்பான்மை பலம் இல்லாததால் எங்களால் ஆட்சி அமைக்க முடியாது என கவர்னர் கோஷ்யரிடம் பா.ஜ.க. நேற்று தெரிவித்தது. இதனையடுத்து அதிக இடங்களை வென்ற (56) சிவ சேனாவை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர்  அழைப்பு விடுத்தார். இப்படி திடுப்திப்புன்னு ஆட்சி அமைக்க கவர்னர் கூப்பிடுவார்ன்னு சற்றும் எதிர்பார்க்காத சிவ சேனா, ஆட்சி அமைப்பது தொடர்பாக திங்கட்கிழமை (இன்று) இரவு 7 மணிக்குள் தங்களது நிலையை கூறுவதாக கவர்னரிடம் தெரிவித்தது. இதனையடுத்து ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் சிவ சேனா தீவிரமாக களமிறங்கியுள்ளது.

சந்திரகாந்த் பாட்டில்

கவர்னரை சந்தித்த பிறகு, செய்தியாளர்கள் சந்திப்பை பா.ஜ.க. நடத்தியது. அப்போது அம்மாநில பா.ஜ.க. தலைவர் சந்திரகாந்த் பாட்டில் பேசுகையில், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி (பா.ஜ.க.-சிவ சேனா) ஆட்சி அமைக்கதான் தேர்தலில் உத்தரவு கிடைத்தது. இருப்பினும் அரசு அமைக்க சிவ சேனா ஒப்புக்கொள்ளவில்லை. மக்களின் உத்தரவை சிவ சேனாதான் அவமதித்து உள்ளது. நாங்கள் ஆட்சி அமைக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் ஆட்சி அமைக்கும் சிவ சேனாவின் முயற்சிக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கட்டும் என வாழ்த்து தெரிவித்தார்.