பெருமைப் படுவதா? வேதனைப் படுவதா? அவலநிலைக்கு ஆளான டெல்டா விவசாயிகள்!

 

பெருமைப் படுவதா? வேதனைப் படுவதா? அவலநிலைக்கு ஆளான டெல்டா விவசாயிகள்!

கஜா புயலில் சாய்ந்து விழுந்த தென்னை மரங்களை, டீக்கடை மேஜையாக பயன்படுத்தும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

சென்னை: கஜா புயலில் சாய்ந்து விழுந்த தென்னை மரங்களை, டீக்கடை மேஜையாக பயன்படுத்தும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

டெல்டா மாவட்டங்களை உறுதெரியாமல் மாற்றி அமைத்துவிட்டு சென்றிருக்கிறது கஜா புயல். ஆசையாய் வளர்த்த பல ஏக்கர் தென்னை, வாழைகளை ஓர் இரவு வீசிச் சென்ற புயலுக்கு இரையாகக் கொடுத்துவிட்டு பரிதவிக்கின்றனர், டெல்டா விவசாயிகள்.

ஆரம்பத்தில், அவர்களுக்கு உதவுவதற்கும், கை கொடுப்பதற்கும் கூட யாரும் முன்வரவில்லை என பார்க்கப்பட்ட சமயத்தில், வழக்கம் போல் சமூகவலைதளங்கள் வாயிலாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒருங்கிணைந்து, தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர்.

gaja

கிட்டத்தட்ட 1.27 லட்சம் மரங்களை கஜா சாய்த்துள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. ஆனால், அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர். ஆசையாய் வளர்த்த தென்னை மரங்கள் சாய்ந்து கிடப்பதை எத்தனை நாட்கள் பார்த்துக் கொண்டிருப்போம் என்ற அவர்களின் ஆதங்கத்தை அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

தமிழக அரசின் பணியாளர்கள் யாராவது வந்தால்கூட, “அய்யா டீசலுக்குக்கூட நாங்க காசு கொடுத்துடறோம். இந்த மரத்தை மட்டுமாவது கொண்டு போயிருங்கய்யா” எனக் கதறுகின்றனர். மரத்தை அறுக்க வருகிறவர்களும் தேக்கு மரங்கள், பழைய மரங்கள் எனப் பணத்தை எதிர்பார்த்து வெட்டி எடுக்கிறார்களாம்.   

coconut trees

இந்நிலையில், மனமுடைந்த டெல்டா விவசாயிகள், நமது நண்பர்கள் விவசாயக் குழு என்ற அமைப்பை உருவாக்கி, சாய்ந்து கிடந்த தென்னை மரங்களை பயனுள்ள பொருளாக மாற்றி, அதற்கு புது வடிவம் கொடுத்து வருகின்றனர். தென்னை மரங்களை சரியான அளவில் வெட்டி, அதனை இருக்கைகளைப் போல வடிவமைத்துள்ள இவர்கள், தயார் செய்யப்படும் இருக்கைகள், தேநீர் கடைகள், பூங்காக்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் பயன்படுத்தவும் செய்கின்றனர். 

பேரழிவிலும் கூட இத்தனை சிறப்பாக யோசிக்கும் திறம் படைத்த விவசாயிகளை பார்த்து பெருமையாக இருந்தாலும், ஒரு புறம் அவர்களின் மன ஓட்டத்தை நினைத்தால் வேதனை தான் மிஞ்சுகிறது.