பென்ஷன் பணத்தில் முககவசம், இரு சிறுமிகளின் பாடல் – பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி

 

பென்ஷன் பணத்தில் முககவசம், இரு சிறுமிகளின் பாடல் – பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி

ஊரடங்கு நேரத்தில் சமூக அக்கறையுடன் செயல்படும் சிலரைப் பற்றி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

டெல்லி: ஊரடங்கு நேரத்தில் சமூக அக்கறையுடன் செயல்படும் சிலரைப் பற்றி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 12 ஆயிரத்து 400 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் இதுவரை 423 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 1500-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முதலில் 21 நாட்கள் இந்தியாவில் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து மீண்டும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. வருகிற மே 3-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கால் பல கோடி பேர் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் ஏழைகள் பல கோடி பேர் உணவு, இருப்பிடம் இன்றி அல்லோலகல்லோலபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஊரடங்கு நேரத்தில் சமூக அக்கறையுடன் செயல்படும் சிலரைப் பற்றி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். ரியசியைச் சேர்ந்த 74 வயதான ஓய்வூதியதாரர் யோக் ராஜ் மெங்கி என்பவர் தனது மாத ஓய்வூதியத்திலிருந்து தயாரித்த 6000-க்கும் மேற்பட்ட முகமூடிகளை விநியோகித்துள்ளார். அவர் இப்போது இலவச ரேஷனையும் விநியோகிக்கிறார்.

சாய்பா, சைஷா குப்தா என்ற சிறுமிகள் கொரோனா வைரஸைத் தோற்கடிப்பது குறித்து விழிப்புணர்வு பாடலை உருவாக்கி பதிவிட்டுள்ளனர். கொரோனாவை எதிர்ப்பது குறித்து கபடி வீரர்கள் பேசிய விழிப்புணர்வு ஆரோக்கிய சேது ஆப்-க்காக வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோயைத் தவிர்ப்பது குறித்து சிறுவர்கள் சிலர் விளையாட்டு மூலம் வீடியோ வெளியிட்டனர்.

இவர்கள் அனைவரையும் பிரதமர் மோடி பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர்கள் போன்ற பொறுப்புள்ள இளைஞர்கள், குடிமகன்களால் நாடு பெருமை கொள்வதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.