பெண் பத்திரிகையாளரை மிரட்டிய விவகாரம்: அமைச்சர் வேலுமணியின் பினாமி மீது ஆங்கில நாளிதழ் புகார்

 

பெண் பத்திரிகையாளரை மிரட்டிய விவகாரம்: அமைச்சர் வேலுமணியின் பினாமி மீது ஆங்கில நாளிதழ் புகார்

சென்னை: பெண் பத்திரிகையாளரை மிரட்டிய விவகாரம் தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பினாமி மீது சென்னை காவல்துறையில் அவர் பணிபுரிந்து வரும் ஆங்கில நாளிதழ் புகார் அளித்துள்ளது.

சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் தனக்கு நெருக்கமானவர்களுக்கு உள்ளாட்சி துறை தொடர்பான ஒப்பந்தங்களை தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பான செய்தியை சேகரித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் கோவை செய்தியாளர் கோமல் கவுதம் வெளியிட்டிருந்தார். இதையடுத்து, பிரபல ஆங்கில தொலைக்காட்சி நிறுவனமான, டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் “டைம்ஸ் நவ்” தொலைகாட்சி இது தொடர்பான செய்தியை ஆதாரங்களுடன் வெளியிட்டது. அதன் பின்னர், இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அமைச்சர் வேலுமணி, தன் மீது அவதூறு செய்தி பரப்பிய செய்தி நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரரும், அமைச்சர் வேலுமணியின் பினாமியாக அறியப்படுபவருமான கே.சி.பி.சந்திரசேகர் என்பவர் பெண் பத்திரிகையாளர் கோமல் கவுதமின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தரக்குறைவான வார்த்தைகளில் திட்டி மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், கோமல் கவுதமை தரக்குறைவாகப் பேசியதுடன், லஞ்சம் கொடுக்காத காரணத்தினால் தான் செய்தி வெளியிட்டதாக கூறியிருந்தார்.

ஒப்பந்ததாரர் தரக்குறைவாக மெசேஜ் அனுப்பிய, வாட்ஸ் அப் ஸ்க்ரீன்ஷாட் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பெண்களை அவதூறாகப் பேசுவது, செய்திகளில் உண்மைகளை வெளிப்படுத்துபவர்களை மிரட்டுவது ஜனநாயக விரோதம் என கண்டனக் குரல்கள் எழுந்தன

இந்நிலையில், பெண் பத்திரிகையாளரை மிரட்டிய விவகாரம் தொடர்பாக கே.சி.பி.சந்திரசேகர் மீது டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் சார்பில் சென்னை காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பெண் பத்திரிகையாளர் கோமல் கவுதம் மற்றும் கோவை தலைமை செய்தியாளர் மயில்வாகனன் ஆகியோர் சார்பில் இரண்டு தனித்தனி புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, அமைச்சர் எஸ் பி வேலுமணி மீதான லஞ்சப் புகார் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு இயக்குனரிடம் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Times of India Group files complaint to Chennai Police against Velumani’s benami, KCP Chandrasekar, for threatening woman journalist