பெண் குழந்தையை பெற்றெடுத்தார் எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி

 

பெண் குழந்தையை பெற்றெடுத்தார் எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி

சாத்தூரில் எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது

மதுரை: சாத்தூரில் எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அப்பெண்ணின் உடலில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதாகவும், உடனே ரத்தம் ஏற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதனையடுத்து, அப்பெண்ணுக்கு ரத்தம் ஏற்றும் பணிகளில் மருத்துவமனை ஊழியர்கள் ஈடுபட்டனர். அதன்படி, ரத்த வங்கியில் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது. ஆனால், தானமாக பெறப்பட்டு கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில் எச்ஐவி நோய் தொற்று இருப்பது பின்னர் கண்டறியப்பட்டது. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பெண்ணின் குடும்பத்தினர், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை மற்றும் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க 5 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

அதேபோல், இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்குப்பதிவும் செய்துள்ளது.

இதனிடையே, எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அப்பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை எடை குறைவாக உள்ளதால் இரண்டு நாள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்திருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், 45நாட்களுக்கு பின்னர்தான் குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று உள்ளதா என்பது குறித்து பரிசோதிக்க முடியும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.