பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்; ஆக்ராவில் தொடரும் சோகம்

 

பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்; ஆக்ராவில் தொடரும் சோகம்

ஆக்ராவில் குரங்குகள் கூட்டம் பெண்ணை கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ: ஆக்ராவில் குரங்குகள் கூட்டம் பெண்ணை கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள காகிரனுல் பகுதியை சேர்ந்தவர் பூரான்தேவி(59). இவர் வயல் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென குரங்குகள் கூட்டம் அவரை சரமாரியாக கடித்தது. இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அவரை தொடர்ந்து குரங்குகள் கடித்து குதறின.

இதனால் படுகாயம் அடைந்த அவர் செய்வதறியாது குரங்குகள் கூட்டத்திலேயே மாட்டிக்கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், குரங்குகள் கூட்டத்தை விரட்டியடித்துவிட்டு பூரான் தேவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல் சில நாட்களுக்கு முன்பு ஆக்ராவில் பிறந்து 12 நாட்கள் மட்டுமே ஆன பச்சிளம் குழந்தை தாயிடம் பால் குடித்து கொண்டிருந்தபோது குரங்கு ஒன்று அக்குழந்தையை கடித்து கொன்றது. குரங்குகள் தொடர்ந்து மனிதர்களை கொன்று வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். மேலும் இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.