பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை; வழக்கை நீர்த்து போகச் செய்யும் முயற்சியில் போலீசார்!?

 

பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை; வழக்கை நீர்த்து போகச் செய்யும் முயற்சியில் போலீசார்!?

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கை நீர்த்து போகச் செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன

மதுரை: தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கை நீர்த்து போகச் செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்ய கடந்த 2006-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. நூறு நாள் வேலை திட்டம் என்றழைக்கப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் படி, கிராமப்புற மக்கள் பெருமளவு பயனடைந்து வருகின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி இராமையன்பட்டி கிராமத்தை சேர்ந்த 35 வயதான உஷா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)  கடந்த 2011-ஆம் ஆண்டில் பணித்தளப் பொறுப்பாளராக பணியில் சேர்ந்துள்ளார். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணி வேண்டுவோருக்கு வேலைகளை ஒதுக்கி அட்டை போடுவது உள்ளிட்ட பணிகளை உஷா மேற்கொண்டு வந்துள்ளார்.

பணியில் மோசடி:

இராமையன்பட்டி ஊராட்சி செயலாளர் ரேவதியிடம் தான் தனது வேலைகள் குறித்த அறிக்கை உள்ளிட்டவற்றை ரேவதி சமர்பிக்க வேண்டும். அவரது கணவர் திருப்பதி, இராமையன்பட்டி கிராமத்தில் தாட்டியமான ஆள். தனது மனைவியின் அரசு பதவி அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு வலம் வருபவர். இந்த சூழலில், சதித்திட்டம் ஒன்றை தீட்டி தனது பாக்கெட்டை நிரப்ப நினைத்த திருப்பதி, அதிகமான பணி அட்டைகளை போட சொல்லி உஷாவை வற்புறுத்தியுள்ளார். மேலும், எந்த பிரச்னை வந்தாலும் தாம் பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். ஊராட்சி செயலாளரின் கணவர் என்பதால் உஷாவும் அவர் சொன்னவாறு செய்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டில் தணிக்கை ஆய்வு நடைபெற இருந்த சமயத்தில், தனக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைக்குமாறு உஷாவை திருப்பதி அழைத்துள்ளார். ஒத்துழைக்காத பட்சத்தில் அதிக பணி அட்டைகளை போட்ட மோசடி குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தி விடுவதாக மிரட்டியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை:

மேலும், தன்னுடைய மனைவி பேச வேண்டும் என கூறுகிறார் என்று கூறி உஷாவை வீட்டுக்கு அழைத்துள்ளார் திருப்பதி. இதனை நம்பி உஷா அவரது வீட்டுக்கு போன நிலையில், அங்கு யாரும் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது, தன்னுடைய பாலியல் இச்சைகளுக்கு இணங்குமாறு உஷாவை மிரட்டியுள்ளார். அதன் பின்னர், தன்னுடைய வீட்டுக்கு யாரும் இல்லாத சமயத்தில் அடிக்கடி வந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக உஷா தெரிவித்துள்ளார். தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இதுபோன்று பாலியல் ரீதியாக உஷாவுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார் திருப்பதி. சில நேரங்களில் மது போதையிலும் வந்து தொந்தரவு கொடுத்துள்ளார்.

தவறாக நினைத்த அக்கம்பக்கத்தினர்:

ஆனால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களோ இதுகுறித்து அறியாமல் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக நினைத்துள்ளதாக குற்றம் சாட்டும் உஷா, கடந்த 2017-ஆம் ஆண்டு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தன்னுடைய பணியை ராஜினாமா செய்து விட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்துள்ளார். ஆனாலும், திருப்பதி தொடர்ந்து உஷாவின் ரகசியங்களை குடும்பத்திடம் கூறி விடுவதாக மிரட்டி தொந்தரவு அளித்து வந்துள்ளார். இதனால், பல முறை தற்கொலைக்கும் உஷா முயன்றுள்ளார்.

கணவன் – மனைவி இடையே சண்டை:

இதுகுறித்து உஷாவின் கணவருக்கு தெரிய வந்த போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு தனது மனைவியின் மேல் தவறு இல்லை என்பதை அறிந்த அவரது கணவர், திருப்பதிக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

காவல்நிலையத்தில் புகார்:

இதுகுறித்து மதுரை மாவட்டட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த இரண்டு வாரங்கள் கழித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றவாளி தப்பிக்க வழியேற்படுத்தும் வகையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள போலீசார், இதனை நீர்த்து போகச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உஷா அளித்துள்ள புகாரில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால், போலீசார் பதிவு செய்துள்ள எஃப்.ஐஆர்-ல் அதுபோன்ற தகவல் இடம்பெறவில்லை.

இதனிடையே, திருப்பதியை கைது செய்த போலீசார், மூன்றே நாட்களில் அவரை ஜாமீனில் விடுவித்துள்ளனர். அதன்பிறகு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எதிராக திரண்ட கிராம மக்கள்:

அதேசமயம், உஷா மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக இராமையன்பட்டி கிராம மக்கள் திரண்டுள்ளனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து பெண்களும் பாலியல் ரீதியாக தொந்தரவுக்கு ஆளாகியுள்ளதாக நான் குற்றம் சாட்டியதாக அவர்கள் தவறாக நினைகிறார்கள். ஆனால், நான் அனைத்து பெண்களையும் குறிப்பிடவில்லை. தவறு செய்தவர் ஜாலியாக இருக்கிறார். ஆனால், தவறு செய்யாத நாங்கள் தான அசிங்கப்படுகிறோம் என வேதனையுடன் தெரிவிக்கிறார் உஷா.