பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: ஹர்திக்பாண்டியா, கே.எல்.ராகுல் மீதான தடை ரத்து

 

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: ஹர்திக்பாண்டியா, கே.எல்.ராகுல் மீதான தடை ரத்து

பெண்கள் மற்றும் பாலியல் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக்பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை பிசிசிஐ-யின் நிர்வாகிகளின் குழு ரத்து செய்துள்ளது

புதுதில்லி: பெண்கள் மற்றும் பாலியல் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக்பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை பிசிசிஐ-யின் நிர்வாகிகளின் குழு ரத்து செய்துள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்றில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் பேசிய அவர்கள், பெண்கள் தொடர்பாக பேசுகையில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவு செய்தனர். பாலியல் தொடர்பாகவும் வெளிப்படையாக பேசினர். இவர்களின் இந்த கருத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களிலும் விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து, ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுலின் பொறுப்பற்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இருவருக்கும் இடைக்காலத் தடை விதித்தது. இதனால், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் அவர்கள் பங்கேற்காமல் நாடு திரும்பினர். தற்போது நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளிலும் அவர்களை அணி நிர்வாகம் தேர்வு செய்யவில்லை.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக்பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை பிசிசிஐ-யின் நிர்வாகிகளின் குழு ரத்து செய்துள்ளது. எனினும், விசாரணை அதிகாரியை உச்சநீதிமன்றம் நியமித்த பின்னர், இருவர் மீதான விசாரணை தொடரும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் குழு, இது தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை அதிகாரியை நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 5-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.