பெண்களை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்: விடுதி காப்பாளர் புனிதா சரண்

 

பெண்களை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்: விடுதி காப்பாளர் புனிதா சரண்

கோவை: விடுதியில் தங்கியிருந்த பெண்களைத் தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் தலை மறைவாக இருந்த காப்பாளர் புனிதா கோவை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

கோவை #Coimbatore சேரன்மாநகர் அருகே உள்ள வி..பி. நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (48). இவருக்குக் கோவை பாலரங்கநாதபுரம் ஜீவா வீதியில் தர்ஷனா என்ற பெயரில் மகளிர் விடுதியும், தண்ணீர்ப்பந்தல் ரோட்டில் இதுபோன்று மற்றொரு விடுதி இருக்கிறது. தர்ஷனா விடுதியில் புனிதா (32) என்பவர் விடுதி காப்பாளராக உள்ளார். இங்கு வேலைக்கும் செல்லும் பெண்கள், கல்லூரியில் படிக்கும் பெண்கள் என ஏராளமானோர் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், விடுதி உரிமையாளர் ஜெகநாதனின் பிறந்தநாள் விழா சில தினங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டது. அந்த விழாவிற்கு விடுதி மாணவிகள் சிலரை காப்பாளர் புனிதா அழைத்துச் சென்றுள்ளார்.

தொடர்ந்து பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது, விடுதி உரிமையாளர் மற்றும் வேறு சிலருடன் உல்லாசமாக இருந்தால் அதிகளவில் பணம் கிடைப்பதுடன், நீங்கள் விடுதி கட்டணம் செலுத்த வேண்டாம். அதுபோன்று கல்லூரி கட்டணத்தையும் நாங்களே செலுத்தி விடுவோம் என மாணவிகளைக் காப்பாளர் புனிதா தவறான பாதைக்கு அழைத்ததாகத் தெரிகிறது. அதேபோல், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மாணவிகளிடம் ஜெகநாதன் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விடுதி உரிமையாளர் ஜெகநாதன் மற்றும் காப்பாளர் புனிதா ஆகியோரைத் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த காப்பாளர் புனிதா கோவை 6-வது நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

முன்னதாக, நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே கிணறு ஒன்றில் விடுதி உரிமையாளர் ஜெகநாதன் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.