பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம்? ஐ.நா., வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

 

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம்? ஐ.நா., வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் என்பது தொடர்பான ஆய்வின் அதிர்ச்சிகர முடிவுகளை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது

சென்னை: பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் என்பது தொடர்பான ஆய்வின் அதிர்ச்சிகர முடிவுகளை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நாள் கடந்த 25-ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு பெண்களுக்கு எதிராகக் கடந்த ஆண்டு நடந்த வன்முறைகள் குறித்த அறிக்கையை ஐ.நா.வின் போதை மருந்து மற்றும் குற்றத்தடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த ஆண்டு மட்டும் உலக அளவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் கணவன், பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளதால், அவர்களது வீடே பெண்களுக்கு மிக ஆபத்தான இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்து 2017-ஆம் ஆண்டுக்கு இடையே பெண்கள் தங்களின் கணவர்கள், குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்ட விகிதாச்சாரத்தின் அளவு அதிகரித்துள்ளது. பெரும்பாலும் தங்களின் கணவராலும், வரதட்சணைக் கொடுமையாலும், சாதிமாறி செய்யப்படும் திருமணத்தால் நடக்கும் ஆணவக் கொலையாலும் கொல்லப்படுகிறார்கள் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாலின பாகுபாடு, சமத்துவமின்மை போன்ற காரணங்களால்தான் பெண்கள் அதிகளவில் கொலை செய்யப்படுகின்றனர். உறவுகள் மற்றும் குடும்பத்தில் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்படும் சூழல் இன்னும் உருவாகவில்லை என ஐ.நா-வின் போதைப் பொருள் மற்றும் குற்றப்பிரிவு தடுப்பு தலைமை அதிகாரி யுரி ஃபெடோடொவ் கூறியுள்ளார்.