பெட்ரோல், டீசல் விலை மீண்டும் எகிற வாய்ப்பு!

 

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் எகிற வாய்ப்பு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஹார்மோஸ் ஜலசந்தி

கச்சா எண்ணெயில் இருந்து பெட்ரோல், டீசல் மற்றும் மண்எண்ணெய் போன்ற பல பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. இப்பம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏன் உயர்ந்தது என்பதை பார்ப்பதற்கு முன்னாடி ஈரானின் எல்லை பகுதியில் அமைந்துள்ள ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியை பத்தி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். ஹார்மோஸ் ஜலசந்தி மிகவும் குறுகிய கடல்பகுதி. இந்த பகுதி வழியாகத்தான் உலகின் மொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதம் நடைபெறுகிறது. எல்.என்.ஜி. போக்குவரத்தில் 25 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாக நடைபெற்று வருகிறது.

இனி கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு என்ன காரணம் என்று பார்ப்போம். ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் வீழ்த்தியது. இது அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கடும் கோபத்தை கிளப்பியது. இதனையடுத்து ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாகவும், கடைசி நேரத்தில் மனம் மாறியதால் போர் தாக்குதல் நடைபெறவில்லை. இருப்பினும், டிரம்ப் போர் எண்ணத்தை முழுமையாக கைவிட்டதாக தெரியவில்லை என நியூயார்க்  டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

எண்ணெய் கப்பல்

அணு ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவும், ஈரானும் மோதி வரும் வேளையில், அமெரிக்காவின் உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தி இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் ஈரானை சுற்றி போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதன் காரணமாக ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்வது அதிக ரிஸ்க் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் சப்ளையில் நெருக்கடி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் அதன் விலை எகிற தொடங்கியுள்ளது.

சர்வதேச சந்தையில் கடந்த வியாழக்கிழமையன்று  பிரென்ட் ஆயில் விலை 5 சதவீதம் வரை உயர்ந்தது. அதாவது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை சுமார் 65 டாலர் அளவுக்கு வர்த்தகம் ஆனது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியாவுக்கு பெரிய தலைவலி ஏற்படும். ஏனென்றால் நம் நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி மிகவும் குறைவு. மொத்த தேவையில் 83 சதவீதத்தை இறக்குமதி வாயிலாகத்தான் பூர்த்தி செய்கிறது. 

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஏற்கனவே பெரிய தொகையை இந்தியா செலவிட்டு வரும் வேளையில், எண்ணெய் விலை மேலும் அதிகரித்தால் அது கூடுதல் செலவினத்தை ஏற்படுத்தும். மேலும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்கு போதிய நிதி இருக்காது. கச்சா எண்ணெய் விலை நடுநிலையாக இருந்தால் மட்டுமே நமக்கு பாதிப்பு ஏற்படாது. இதனால் சவுதி அரேபியாவிடம் கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுத்து நிறுத்தி நடுநிலையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் அதன் தாக்கம் நம்முடைய பெட்ரோல், டீசல் விலையிலும் எதிரொலிக்கும்.