பெட்ரோல், டீசல் விலை குறித்து பயப்பட வேண்டிய அவசியமில்லை….. தர்மேந்திர பிரதான் தகவல்

 

பெட்ரோல், டீசல் விலை குறித்து பயப்பட வேண்டிய அவசியமில்லை….. தர்மேந்திர பிரதான் தகவல்

அமெரிக்க-ஈரான் பதற்றம் காரணமாக பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரானின் முக்கிய படை தளபதியான காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றது. இதனால் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 72 டாலராக உயர்ந்தது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் நம் நாட்டில்  சில தினங்கள் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டது.

ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம்

நம் நாட்டில் சர்வதேச சந்தையில் நிலவும் விலை அடிப்படையில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதனால் சர்வதேச சந்தையில் விலை கூடினாலும், குறைந்தாலும் உடனடியாக அதன் தாக்கம் பெட்ரோல், டீசல் விலையில் வெளிப்படும்.  இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஈரான்-அமெரிக்கா பதற்றம் காரணமாக பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

கச்சா எண்ணெய் விலை நிலவரம்

புவி அரசியல் காரணங்களால் பாரசீக வளைகுடாவில் பதற்றம் நிலவுகிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்படவில்லை. ஆமாம், பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலையில் சிறிது ஏற்றம் ஏற்பட்டது. ஆனால் கடந்த 2 தினங்களாக அதன் விலை குறைந்து வருகிறது. காத்திருந்து மற்றும் பார்க்கும் நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது மேலும் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறித்து பீதியடைய வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.