பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை?

 

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை?

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. அதேசமயம் எதிர்கால எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

நம் நாட்டு சாலைகளில் செல்லும் 99 சதவீத வாகனங்கள் டீசல், பெட்ரோலில் இயங்குபவை. இந்த வாகனங்கள் வெளியிடும் புகையால் காற்று மாசு அடைகிறது. அதன் விளைவாக லட்சக்கணக்கான பேர் ஆண்டுதோறும் மரணம் அடைகின்றனர். இதனால் காற்று மாசு அடைவதை கட்டுப்படுத்தும் வகையில், சுற்றுப்புறச்சூழலுக்கும், காற்றுக்கும் கேடு விளைவிக்காத மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

தர்மேந்திர பிரதான்

இதனையடுத்து 150 சிசி திறனுக்கும் குறைவான இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு சமீபத்தில் உத்தரவிட்டது. மேலும், அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் மின்சார வாகனங்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கி இருந்தார். இதனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மத்திய அரசு தடை விதிக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் இடையே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மத்திய அரசு தடை விதிக்குமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தர்மேந்திர பிரதான் கூறியதாவது:

மின்சார வாகனங்கள் சார்ஜிங்

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும் என மத்திய அரசு சொல்லவே இல்லை. டிரக்ஸ் மற்றும் இதர வாகனங்கள் சாலையில் தொடர்ந்து பயணிக்கும். நமது எரிபொருள் தேவை அதிகரித்து வருகிறது.  நமது பொருளாதார பலத்தை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த செயல் திட்டம் உள்ளது அதனால் வரும் ஆண்டுகளில் எரிபொருள் அதிகரிக்கும். 

இன்னும் சில ஆண்டுகளில் அதிகம் எரிபொருள் பயன்படுத்தும் நாடாக இந்தியா உருவெடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை இயக்குவதற்காக அதிகரித்து வரும் ஆற்றல் (எரிசக்தி) தேவையை மின்சார வாகனங்கள் பூர்த்தி செய்யும். அதனால்தான் மின்சார வாகனங்களுக்கு பட்ஜெட்டில் சலுகை அளிக்கப்பட்டது. 2020 ஏப்ரல் முதல் யூரோ 6 எரிபொருள் மற்றும் வாகன என்ஜின்களை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசும்,பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மற்றும் வாகன தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து செயல்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.