பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை திடீரென உயர்த்திய மத்திய அரசு… ஆனாலும் சில்லரை விற்பனை விலையில் மாற்றம் இருக்காது….

 

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை திடீரென உயர்த்திய மத்திய அரசு… ஆனாலும் சில்லரை விற்பனை விலையில் மாற்றம் இருக்காது….

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு முறையே ரூ.10 மற்றும் ரூ.13 உயர்த்தியது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.1.6 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ.2ம், சாலை செஸ் லிட்டருக்கு ரூ.8ம் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ.5ம், சாலை செஸ் லிட்டருக்கு ரூ.8ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான மொத்த கலால் வரி ரூ.32.98ஆகவும், ஒரு லிட்டர் டீசல் மீதான கலால் வரி 31.83ஆகவும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பம்பு

அதேசமயம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயர்வால் சில்லரை விற்பனை விலையில் எந்தமாற்றமும் இருக்காது. ஏனென்றால் அண்மையில் கச்சா விலை வீழ்ச்சியில் கிடைக்கும் ஆதாயத்தில் இந்த வரி உயர்வை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சரி செய்து கொள்ளும் என்பதால் பெட்ரோல் மற்றம் டீசலின் சில்லரை விற்பனை விலையில் எந்த பாதிப்பும் இருக்காது என இத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

வருவாய்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு கண்ட போதிலும், கடந்த மார்ச் 16ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மாற்றியமைக்கப்படவில்லை. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைவு ஆதாயத்தை கலால் வரி உயர்வு மூலம் சரிசெய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையிலான காலத்தில் தற்போது இரண்டாவது முறையாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது. மார்ச் மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தியது. இதன் மூலம் மத்திய அரசு ரூ.39 ஆயிரம் கோடியை கூடுதல் வருவாயாக திரட்டியது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள டீசல் மற்றும் பெட்ரோல் மீதான கலால் வரி உயர்வால் மத்திய அரசுக்கு சுமார் ரூ.1.60 லட்சம் கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.