பூப்பெய்ததால் தனி குடிசையில் வைக்கப்பட்ட சிறுமி: கஜா புயலால் குடிசையில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்!

 

பூப்பெய்ததால் தனி குடிசையில் வைக்கப்பட்ட சிறுமி: கஜா புயலால் குடிசையில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்!

பூப்பெய்தியதால் தனிக்குடிசையில் தங்க வைக்கப்பட்ட மாணவி, கஜா புயலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பட்டுக்கோட்டை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டை: பூப்பெய்தியதால் தனிக்குடிசையில் தங்க வைக்கப்பட்ட மாணவி, கஜா புயலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பட்டுக்கோட்டை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கஜா புயலின் கோரத் தாண்டவத்தால்  நாகை, வேதாரண்யம், பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகள் பாதிப்புக்கு  உள்ளாகியுள்ளன. கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதால், மக்கள் தங்களது  உடமைகளை இழந்து வாடி வருகின்றனர். மேலும் கஜா புயலுக்கு 46 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பட்டுக்கோட்டையில் 7 ஆம் வகுப்பு மாணவியின் உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பூப்பெய்துள்ளார். வியாழக்கிழமை இரவு புயல் கரையைக்கடக்கும் நிலையில், பூப்பெய்திய மாணவியை அருகில் உள்ள தென்னந்தோப்பில் உள்ள தனிக்குடிசையில் தங்க வைத்துள்ளனர்.

pattukottai

அன்று இரவு கரையேறிய கஜா புயலில் தென்னந்தோப்பில் இருந்த மரங்கள் எல்லாம் பிடுங்கி வீசப்பட்ட நிலையில் மாணவி தங்கியிருந்த குடிசையும் அடித்து வீசப்பட்டுள்ளது. புயலின் கோரதாண்டவத்தின் சத்தத்தில் மிரண்ட சிறுமி கதறி அலறியுள்ளார். ஆனால் அவரது குரல் யாருக்கும் கேட்கவில்லை. வெளியேவும் வரமுடியாமல் குடிசைக்குள்ளேயே இறந்து போயிருக்கிறார் சிறுமி.

பெற்றோர்களும், உறவினர்களும் காலையில் எழுந்து பார்த்தபோது தென்னந்தோப்பே சீரழிந்து கிடந்துள்ளது. தன் மகள் தங்கி இருந்த குடிசையே காணாத நிலையில் தென்னமரங்களுக்கு இடையே இறந்து கிடந்த மாணவியை அப்பகுதி வாசிகள் மீட்டுள்ளனர். புயலால் சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், இறந்து போன மாணவியின் உடலை மருத்துவமனைக்குக்கூட எடுத்துச்செல்ல முடியாமல்  20 மணி நேரம் தோளிலேயே சுமந்து மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குப் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் 18 மணி நேர நடைப்பயணத்துக்கு பிறகு மாணவியின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.