பூட்டிய வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த இஸ்ரோ விஞ்ஞானி

 

பூட்டிய வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த இஸ்ரோ விஞ்ஞானி

ஹைதராபாத்தில் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் தனது ப்ளாட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள இஸ்ரோவின் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டரில் பணிபுரிந்து வந்தவர் எஸ். சுரேஷ். 56 வயதான சுரேஷுக்கு சொந்த மாநிலம் கேரளா. கடந்த 20 ஆண்டுகளாக ஹைதராபாத்தில் வசித்து வந்தார். அவருடன் அவரது மனைவி இந்திராவும் வசித்து வந்தார். இந்நிலையில் 2005ல்  பணியிட மாற்றம் காரணமாக இந்திரா சென்னைக்கு வந்து விட்டார். அவர்களது மகன் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். மகள் டெல்லியில் வசித்து வருகிறார்.

இஸ்ரோ

இதனால் ஹைதராபாத்தின் அமீர்பெட் பகுதியில் உள்ள அன்னபூர்ணா அப்பார்ட்மெண்ட் உள்ள தனது வீட்டில் சுரேஷ் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று சுரேஷ் அலுவலகத்துக்கு வராததால் அவரது மொபைலுக்கு அவருடன் பணிபுரிபவர்கள் போன் செய்துள்ளனர். ஆனால் எத்தனை முறை முயற்சி செய்தபோதும் அவரது போன் எடுக்கப்படாததால் சுரேஷின் மனைவி இந்திராவுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.

கொலை

இதனையடுத்து சில உறவினர்களுடன் ஹைதராபாத் வந்த இந்திரா போலீசாரின் உதவியை நாடினார். அதன் பிறகு அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் உள்ளே ரத்த வெள்ளத்தில் சுரேஷ் பிணமாக தரையில் கிடந்தார். இதனையடுத்து மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், தலையில் கனமான பொருளை கொண்டு தாக்கி சுரேஷ் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். ஹைதராபாத்தின் முக்கியமான பகுதியில் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் அந்த பகுதி மக்களுக்கு கொடுத்துள்ளது.