புலிப்பாணி சித்தர் அருளிய விசக்கடி வைத்தியம்

 

புலிப்பாணி சித்தர் அருளிய விசக்கடி வைத்தியம்

புலிப்பாணி சித்தர் வழங்கிய விஷக்கடி மருத்துவ முறைகளை பற்றி விரிவாக பார்போம்.

சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள் தனது ஆய்வின் மூலமாக நோயினைத் தீர்க்க மருத்துவ முறையை தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்து கூற இயலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.

pulipaani

அந்த வரிசையில் இன்று புலிப்பாணி சித்தர் அருளிய வைத்திய முறை ஒன்றினை இன்றைய பதிவில் பார்ப்போம். இந்த தகவல்கள் புலிப்பாணி சித்தர் அருளிய புலிப்பாணி வைத்தியசாரம் என்கிற நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது.

பாடியதோர் விசங்களெல்லாந் தீரவேதான்
பண்பாக எட்டிப் பழந்தன்னை வாங்கி
கூடியதோர் சட்டியிலே வேணமட்டுங்
குணமாகத் தானெடுத்து வேப்பெண்ணெய் விட்டு
நாடியே அடுப்பேற்றி வேகவைத்து
நலமாக உருட்டியதைச் செப்பில் மூடி
தூடியே விசந்தீண்டி வந்தபேர்க்குத்
தூதுளங் காயளவு கொடுத்திடாயே.

புலிப்பாணி சித்தர்.

எட்டிப் பழங்கள் சிலவற்றை எடுத்து ஒரு மண் சட்டியில் இட்டு, அது மூழ்கும் வரை வேப்பெண்ணெய் விடவேண்டுமாம். பின்னர் மண் சட்டியினை அடுப்பில் ஏற்றி வேப்பெண்ணெய் வற்றும் வரை நன்கு காய்ச்சி எடுத்து செம்பினால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம்.  

pulipaani

பின்னர் எந்தவகையான விஷக் கடியானாலும், சிமிழில் சேமித்து வைத்த மருந்தில் இருந்து தூதுளங்காய் அளவு எடுத்து, பாதிக்கப் பட்டவருக்கு உண்ணக் கொடுக்க வேண்டுமாம்.

இவ்வாறு உண்ணக் கொடுத்தால் உடலில் இருந்த விஷங்கள் எல்லாம்  நீங்கி விடும் என்கிறார் புலிப்பாணி சித்தர். இந்த கற்பத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.

தேவை உள்ளவர்கள் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இதனைப் பயன்படுத்தி பலன் பெறலாம்.