புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் ரயில் பயணத்துக்கு கட்டணம் வசூலிக்கவில்லை… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு….

 

புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் ரயில் பயணத்துக்கு கட்டணம் வசூலிக்கவில்லை… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு….

சிறப்பு ரெயில்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ரயில் பயண கட்டணத்தில் 85 சதவீதத்தை ரயில்வே வழங்குகிறது எஞ்சிய 15 சதவீதத்தை மட்டுமே மாநில அரசுகள் வழங்கும் என மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

லாக்டவுனால் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் சேரமுடியாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தின. இதனையடுத்து மத்திய அரசு ரயில்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்தது. 

ரயிலில் பயணிக்கும் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கும் ரயில்வே

இதற்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றச்சாட்டின. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறுகையில், குஜராத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ரூ.100 கோடி செலவிட்டது மற்றும் பி.எம்.கேர்ஸ் நிதியத்துக்கு ரயில்வே ரூ.151 கோடி வழங்கியது. ஆனால் அவர்களால் ஏழைகளுக்கு இலவச பயணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை என மத்திய அரசை குற்றம் சாட்டினார். மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ரயில் பயண கட்டணத்தை காங்கிரஸ் வழங்கும். எங்கள் தோழர்களின் சேவையில் காங்கிரசின் தாழ்மையான பங்களிப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

சோனியா காந்தி

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களை மத்திய அரசு மறுத்துள்ளது. மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் ரயில் பயணத்துக்காக மத்திய அரசு கட்டணம் வசூலிக்கவில்லை. ரயில் பயண கட்டணத்தில் 85 சதவீதத்தை ரயில்வே வழங்குகிறது. எஞ்சிய 15 சதவீத பயண கட்டணத்தை மட்டுமே மாநில அரசுகள் செலுத்த வேண்டும் என தெளிவாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.