புரோ வாலிபால் லீக்: போராடி தோற்றது சென்னை ஸ்பார்டன்ஸ்

 

புரோ வாலிபால் லீக்: போராடி தோற்றது சென்னை ஸ்பார்டன்ஸ்

புரோ வாலிபால் தொடரில் காலிகட் ஹீரோஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் போராடி தோற்றது.

கொச்சி: புரோ வாலிபால் தொடரில் காலிகட் ஹீரோஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் போராடி தோற்றது.

ரூபே புரோ வாலிபால் லீக்கின் முதல் தொடரில் நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி காலிகட் ஹீரோஸ் அணியுடன் மோதியது. கொச்சி ராஜீவ் காந்தி மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. நரம்புகள் புடைக்க வரம்புகள் உடைக்க…என்ற தாரக மந்திரத்துடன் ஷெல்டன் மோசஸ் தலைமையில் சென்னை ஸ்பார்டன்ஸ் களமிறங்கியது.

Pro Volleyball

ரஸ்லான் செரோக்கின்ஸ், ரூடி வெராஃப், கபில்தேவ் போன்ற அனுபவ நட்சத்திரங்களுடன் ஸ்பார்டன்ஸ் களம் புகுந்தது. மறுமுனையில் கேரள அணியான காலிகட் ஹீரோஸ் ஜெரோம் வினித் தலைமையில் களமிறங்கியது. ஆட்டத்தின் முதல் புள்ளியை காலிகட் ஹீரோஸ் பெற்றது. முதலில் இரு அணிகளும் மாறிமாறி புள்ளிகளை எடுத்தாலும் பின்னர் காலிகட் புள்ளிகளை விரைந்து குவித்து முன்னேறியது. முதல் செட்டின் கடைசி நிமிடங்களில் சென்னை அணி ஆட்டத்தில் வேகம் காட்டினாலும் இறுதியில் 15 – 8 என்ற புள்ளி கணக்கில் முதல் செட்டை காலிகட் தன் வசமாக்கியது. முதல் செட்டில் சென்னை வீரர் வெராஃப்-இன் ஆட்டம் நன்றாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து 2வது செட் தொடங்கியது. இந்ந செட்டிலும் காலிகட் அதிரடியாக புள்ளிகளை குவித்து முன்னேறியது. எனினும் சென்னை வீரர்களும் சளைக்காமல் விளையாடினர். முடிவில் முதல் செட்டை போலவே 2 வது செட்டையும் காலிகட் வீரர்கள் 15-8 என்ற புள்ளிக்கணக்கில் தமதாக்கினர்.

முதல் இரு செட்டுகளையும் இழந்த சென்னை அணி 3வது செட்டில் டாப் கியருக்கு மாறியது. ரூடி வெராஃபும் நவீன் ராஜாவும் ஸ்பைக்குகளால் எதிராளிகளை திணறடித்து புள்ளிகளை குவித்தனர். சென்னை அணி சமயோசிதமாக எடுத்த சூப்பர் பாயின்ட் முடிவும் கைகொடுக்க இறுதியில் 15-13 என இந்த செட்டை ஸ்பார்டன்ஸ் தனதாக்கியது.

எனினும் அடுத்த செட்டை சென்னை அணி 11-15 என்ற புள்ளிக் கணக்கில் இழந்து வெற்றியையும் பறிகொடுத்தது. கடைசி செட்டில் 15-11 என்ற புள்ளிக் கணக்கில் வென்ற காலிகட் அணி போட்டியில் 4-1 என்ற செட் கணக்கில் வென்றது. இப்போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் வீரர் வெராஃப் 8 புள்ளி எடுத்தார். அகின் 6, நவீன் 5 புள்ளிகள் எடுத்தனர்.