புரோ கபடி 2018: பாட்னாவை வீழ்த்தியது வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்

 

புரோ கபடி 2018: பாட்னாவை வீழ்த்தியது வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்

புரோ கபடி லீக் போட்டியில், பாட்னாவை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் தொடரை தொடங்கியது

சென்னை: புரோ கபடி லீக் போட்டியில், பாட்னாவை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் தொடரை தொடங்கியது.

புரோ கபடி 6-வது சீசன் நேற்றிரவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 12 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. ‘ஏ’-பிரிவில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ், மும்பை, தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’-பிரிவில் தமிழ் தலைவாஸ், உ.பி.யோத்தா, பாட்னா பைரட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா 3 முறையும், எதிர்பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும் மோத வேண்டும். அது தவிர எதிர்பிரிவில் உள்ள ஒரு அணியுடன் மட்டும் ‘வைல்டு கார்டு’ சுற்றில் மோத வேண்டும். இதுபோல் ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்றிரவு தொடங்கிய முதல் லீக் ஆட்டத்தில், மிழ் தலைவாஸ் அணியும், நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணியும் மோதின. முதல் நிமிடத்தில் இருந்தே தங்களது ஆதிக்கத்தை வலுவாக நிலை நிறுத்திய தமிழ் தலைவாஸ் அணியினர், முதல் பாதியில் 26-8 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றனர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 42-26 என்ற புள்ளி கணக்கில் பாட்னாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் புரோ கபடி 6-வது சீசன் தொடரை வெற்றியுடன் தமிழ் தலைவாஸ் அணி தொடங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் புனேரி பால்டன்- அரியானா ஸ்டீலர்ஸ் அணியும், இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- உ.பி.யோத்தா அணிகளும் மோதவுள்ளன.