புயல் பாதித்த மாவட்டங்களுக்கு எப்போது செல்கிறேன்? முதல்வர் விளக்கம்

 

புயல் பாதித்த மாவட்டங்களுக்கு எப்போது செல்கிறேன்? முதல்வர் விளக்கம்

கஜா புயல் பாதித்த மாவட்டங்களை நவம்பர் 20-ம் தேதி பார்வையிட இருப்பதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம்: கஜா புயல் பாதித்த மாவட்டங்களை நவம்பர் 20-ம் தேதி பார்வையிட இருப்பதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

கஜா புயல் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சூறையாடியுள்ளது. இதனால் அந்த மாவட்டங்கள் தனித்தீவாகி உள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்து நிவாரண உதவிகள் சென்ற வண்ணம் இருக்கின்றன. ஆனால் நிவாரண உதவிகள் போதவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. மேலும் புயல் பாதித்த மாவட்டங்களை முதல்வர் பழனிசாமி இதுவரை சென்று பார்க்காமல் இருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி புயல் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.  பாதிக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களுக்கு கூடுதல் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நான் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு இன்றே செல்வதாக இருந்தது. ஆனால் கட்டட திறப்பு விழா ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டதாலும், பாதிக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களுக்கு செல்ல ஒரு நாள் முழுதாக தேவை என்பதாலும் என்னால் இன்று செல்ல முடியவில்லை.

நான் நவம்பர் 20-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) புயல் பாதித்த மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்ய இருக்கிறேன். புயல் சேத மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. கஜா புயலால் 45 பேர் உயிரிழந்துள்ளனர், 735 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 1,17,674 வீடுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த மின்கம்பிகளை மீண்டும் நிறுவ 12,532 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். மனிதாபிமானத்தோடு அனைவரும் உதவ வேண்டும் என்றார்.