புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிட்டார் முதல்வர் பழனிசாமி

 

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிட்டார் முதல்வர் பழனிசாமி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார்.

புதுக்கோட்டை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார்.

கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களின் வாழ்வாதாரம் ஒரே இரவில் கால் நூற்றாண்டுக்கு பின்னோக்கி சென்றுள்ளது. அங்கு தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அதேபோல் அரசு தரப்பும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதற்கிடையே புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிட முதல்வர் பழனிசாமி இன்று சென்னையில் இருந்து புறப்பட்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற முதல்வர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு சென்றார். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட மாப்பிளையான் குளம், மச்சுவாடி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளை அவர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களையும், ரூ 10 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கருப்பணன் மற்றும் அரசு உயரதிகாரிகளும் இருந்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயலால் புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்பு குறைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கி வருகிறது. மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.கேரளா மழையின் போது அங்கு ஆளுங்கட்சியுடன் இணைந்து எதிர்க்கட்சிகளும் செயல்பட்டன. ஆனால் அங்கிருக்கும் எதிர்க்கட்சிகளின் மனப்பான்மை இங்கு இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. 

புதுக்கோட்டையில் இதுவரை 45,000 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. 20,000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. புதுக்கோட்டை நகரத்திற்கு நாளை மாலைக்குள் மின்சாரம் வழங்கப்படும். சுற்றியுள்ள கிராமங்களுக்கும் விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்றார். இதன் பின்னர் அவர் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இருக்கிறார்.