புத்தாண்டு சவாலில் வெல்வாரா ஸ்டாலின்?

 

புத்தாண்டு சவாலில் வெல்வாரா ஸ்டாலின்?

பல்வேறு கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும் புத்தாண்டை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்த சூழலில் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

பல்வேறு கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும் புத்தாண்டை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்த சூழலில் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உறுப்பினராக இருந்த தொகுதி மட்டும் அல்ல, அவர் பிறந்த திருக்குவளை கிராமத்தை உள்ளடக்கிய தொகுதியாகவும் திருவாரூர் தொகுதி இருந்து வருகிறது.

kalaignar

இறுதியாக நடைபெற்ற 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருந்தாலும், 234 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதியை வெற்றிபெற செய்ததும் இந்த திருவாரூர் தொகுதிதான். இந்த தொகுதியில் தான் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிட்டு, தமிழகத்திலேயே அதிகப்படியாக 68,366 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார். 

மண்ணின் மைந்தராக ஜொலித்த கருணாநிதிக்கு வாக்குகளை வாரி இரைத்த திருவாரூர் தொகுதி மக்களின் கரங்களில் தான், அவரது மகன் ஸ்டாலினின் அரசியல் எதிர்காலம் அடங்கியிருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், 2011 தேர்தல் தோல்விக்குப் பின்னர் கருணாநிதி மனதளவில் மிகவும் சோர்வடைந்துவிட்டதால், அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் திமுகவின் முகமாகவே ஸ்டாலின் மாறிவிட்டார், அவரின் ஆதரவாளர்களால் மாற்றப்பட்டார். 

stalin

குறிப்பாக, 2014 பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு முதல் தொகுதி பங்கீடு வரை அனைத்துயும் ஸ்டாலின் தான் இறுதி செய்தார். ஆனால், ஸ்டாலினின் வியூகம் திமுகவின் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை. மாறாக, ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியது. அதுவரையில், திமுகவில் அரங்கேறாத காட்சிகள் எல்லாம் அரங்கேறத் தொடங்கின. பொருளாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கருணாநிதிக்கு கடிதம் எழுதினார் ஸ்டாலின்.

அனைத்தையும் ஒரு வழியாக சரிசெய்து, 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழலில் ‘நமக்கு நாமே’ பயணம் கிளம்பினார் ஸ்டாலின். அந்த பயணம், திமுகவை ஆட்சி அரியணைக்கு அழைத்துச் செல்லவில்லை என்றாலும், ஸ்டாலினின் இமேஜையும் திமுகவின் செல்வாக்கையும் வெகுவாக உயர்த்தியதாகவே அரசியல் வல்லுநர்கள் கணக்கிட்டனர். 

kalaignar

இப்படியாக, திமுகவில் அடுத்தடுத்த நிலைக்கு ப்ரமோட்டான ஸ்டாலின், கருணாநிதி மறைவிற்குப் பின் அக்கட்சியின் தலைவராகவே பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இதற்கிடையே, அவர் செயல் தலைவராக இருந்த போது நடைபெற்ற ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனிடம் அவர் படுதோல்வியை சந்தித்த வரலாறும் இருக்கிறது. இருப்பினும், தினகரனுக்கும் ஸ்டாலினுக்குமான ரகசிய உடன்பாடுகளின் அடிப்படையிலேயே தினகரன் வெற்றி பெற்றதாக மற்ற சில கருத்துகள் உலா வந்ததையும் அந்த சமயத்தில் பார்க்க முடிந்தது. 

stalin

இப்படி பல்வேறு சோதனைகளைக் கடந்து தன்னை நிரூபித்தாக வேண்டிய இக்கட்டான ஒரு சூழலில் இருக்கும் ஸ்டாலினுக்கு, புத்தாண்டு பரிசாக திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். தந்தையின் வெற்றிடத்தை மகன் நிரப்ப வேண்டும் என்று முயற்சிப்பதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்றாலும், ஸ்டாலினின் தந்தை இருந்த இடம் என்பது எட்டிபிடிக்க முடியாதது.

அவர் பாணியில் பயணிக்க வேண்டும் என ஸ்டாலின் முயற்சித்ததன் வெளிப்பாடே, அனைவருக்கும் முன்பாக ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது. அதில் தவறேதும் இல்லை என திமுக உடன்பிறப்புகள் வாதாடும் அதே வேளையில், தேசிய அளவில் ஸ்டாலினை கவனிக்கத் தொடங்கியுள்ளனர் என்பதையும் உணர வேண்டும். 

kalaignar

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் போல் ரகசிய உடன்பாடு, எளிமையான வேட்பாளர், பணம் கொடுத்து பெற்ற வெற்றி என தேர்தலில் தோற்ற பின் சொல்லப்போகும் ஆயிரம் காரணங்கள் வரலாற்றில் நிற்காது, பெறப்போகும் வெற்றியை தான் சரித்திரம் பேசும் என்ற அரசியல் ராஜதந்திரத்தை உணர்ந்து, சவாலில் வெல்வாரா ஸ்டாலின் என்பதை ஜனவரி 31-ஆம் தேதி எண்ணப்படும் வாக்குகளின் முடிவுகள் தெரிவித்துவிடும்.