புதுச்சேரி நியமன எம்எல்ஏ-க்கள் பேரவைக்குள் அனுமதி; அதிகாரம் இல்லை என தீர்மானம் நிறைவேற்றம்

 

புதுச்சேரி நியமன எம்எல்ஏ-க்கள் பேரவைக்குள் அனுமதி; அதிகாரம் இல்லை என தீர்மானம் நிறைவேற்றம்

புதுச்சேரி: உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து பாஜக நியமன எம்எல்ஏக்கள் மூன்று பேரும் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு இன்று வருகை புரிந்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் 3 பேரை நியமன எம்.எல்..க்களாக ஆளுநர் கிரண் பேடி பரிந்துரையின் பேரில் மத்திய அரசு நியமித்தது. அதன்படி, புதுவை பாஜக தலைவர் சாமிநாதன், செல்வகணபதி மற்றும் சங்கர் ஆகிய நியமன எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் கிரன்பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆனால், யூனியன் பிரதேச அரசியல் சட்டவிதிகளின் படி இவர்கள் பதவியேற்காததால், அவர்களது நியமனத்தை சபாநாயகர் வைத்திலிங்கம் அங்கீகரிக்கவில்லை. எனவே, நியமன எம்எல்ஏக்களுக்கு உரிய சலுகைகள் மறுக்கப்பட்டது. பேரவைக்குள்ளும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதுச்சேரியில் பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் மூன்று பேரையும் சட்டப்பேரவைக்குள் செல்ல அனுமதிக்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவு வந்தது. இதனிடையே, நியமன எம்எல்ஏக்களை அனுமதித்தால் நிதி மசோதாவை நிறைவேற்ற ஒப்புதல் ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு நியமன எம்எல்ஏக்கள் மூன்று பேரும் வருகை புரிந்தனர். சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய அவர்கள், சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதன்பின்னர், புதுச்சேரி சட்டப்பேரவையில் 2018-ஆம் ஆண்டுக்கான நிதிஒதுக்கீடு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர், நியமன எம்எல்ஏக்களுக்கு அதிகாரம் இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி சட்டப்பேரவையை காலவரையின்றி சபாநாயகர் ஒத்திவைத்தார்.

#puducherry