புதுச்சேரி என்.ஆர்.,காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

 

புதுச்சேரி என்.ஆர்.,காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக கே.நாராயணசாமி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்

புதுச்சேரி: புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக கே.நாராயணசாமி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் வெற்றி பெறும் நோக்கில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ளது. அது தவிர சில அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண்கின்றன.

nr congress

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. திமுக கூட்டணியில், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

vaithilingam

அதிமுக கூட்டணியில் புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி இதுவரை வேட்பாளர் பட்டியலை அறிவிக்காவிட்டாலும், சட்டமன்ற சபாநாயகர் வைத்தியலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், காங்கிரஸ் கட்சி வைத்தியலிங்கத்தை வேட்பாளராக களமிறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

narayanasamy

இந்நிலையில், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கே. நாராயணசாமி (29) அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார். மருத்துவரான கே.நாராயணசாமி, கடந்த 3 ஆண்டுகளாக கட்சியின் இளைஞர் அணியில் இருந்து வருகிறார்.

இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதால் இளைஞர் ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ளதாகவும், ஜக்கு சின்னத்தில் தாங்கள் போட்டியிடுவதாகவும் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.