புதுச்சேரியில் தமிழக பேருந்துகள் மீது பாஜகவினர் கல் வீச்சு

 

புதுச்சேரியில் தமிழக பேருந்துகள் மீது பாஜகவினர் கல் வீச்சு

புதுச்சேரியில் பாஜகவினரின் பந்த் அழைப்பை ஏற்றுக்கொள்ளாமல் ஓடிய தமிழக பேருந்துகள் மீது அக்கட்சியினர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர்.

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜகவினரின் பந்த் அழைப்பை ஏற்றுக்கொள்ளாமல் ஓடிய தமிழக பேருந்துகள் மீது அக்கட்சியினர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர்.

கேரளாவில் இருக்கும் சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் எந்த வித போராட்டம் நடத்தினாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தியே தீருவோம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதியாக இருக்கிறார்.

இந்நிலையில், சபரிமலையின் புனிதத்தை காக்கக்கோரியும், பக்தர்களிடம் கெடுபிடியாக நடந்துகொள்ளும் கேரள அரசை கண்டித்தும் பாஜக சார்பில் புதுவையில் இன்று முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இது கேரள மாநிலத்தில் உள்ள பிரச்னை. இதற்காக புதுவையில் பந்த் போராட்டம் நடத்துவது தேவையற்றது.  யாராவது அதிகாரத்தை கையில் எடுத்து செயல்பட்டால் அவர்கள் மீது சட்டம் பாயும். கடைக்காரர்களை கடைகளை அடைக்க சொல்லி மிரட்டினால் கைது செய்யப்படுவார்கள் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரித்திருக்கிறார்.

இதனையடுத்து பாஜக-வின் போராட்ட அழைப்பினை ஏற்று புதுவையில் பெருமளவிலான தனியார் பேருந்துகள் இன்று இயங்கவில்லை.  பல தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் புதுச்சேரி மற்றும் தமிழக அரசு பேருந்துகள் காவல்துறை பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.  போராட்டத்தினால் வன்முறை ஏற்படாமல் தடுப்பதற்கு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதுவையில் 3 தமிழக அரசு பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கல்வீச்சில் ஈடுபட்ட 4 பாஜக-வினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.