புதுக்கோட்டை பொறியியல் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

 

புதுக்கோட்டை பொறியியல் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் செந்தூரான் பொறியியல் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் செந்தூரான் பொறியியல் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் லேணா விளக்கில் அமைந்திருக்கிறது செந்தூரான் பொறியியல் கல்லூரி. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் இக்கல்லூரியில் நடந்த செமஸ்டர் தேர்வில், அக்கல்லூரியின் தாளாளர் மகன், தனக்கு பதிலாக மற்றொரு மாணவரை தேர்வு மையத்திற்கு அனுப்பி தேர்வு எழுதியது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த கல்லூரியின் அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் அதிரடியாக ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேபோல் மேலும் 3 கல்லூரிகளில் அதிக அளவில் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஒரு கல்லூரி மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

செந்தூரான் கல்லூரி அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளதால் அக்கல்லூரியில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளை மற்ற கல்லூரிகளில் சேர்ப்பது குறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.