புதுக்கோட்டை பழனியப்பா மெஸ்,பொடி மீன் சாப்பிட்ருக்கிறிர்களா?

 

புதுக்கோட்டை பழனியப்பா மெஸ்,பொடி மீன் சாப்பிட்ருக்கிறிர்களா?

ஆரம்பித்து அரை நூறாண்டு கழிந்தும் அதே புகழோடு ,இன்றைக்கும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் பழநியப்பா மெஸ்ஸின் கதையில் உணவகம் நடத்துபவர்களுக்கு ஒரு பாடம்.இருக்கிறது!

ஆரம்பித்து அரை நூறாண்டு கழிந்தும் அதே புகழோடு ,இன்றைக்கும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் பழநியப்பா மெஸ்ஸின் கதையில் உணவகம் நடத்துபவர்களுக்கு ஒரு பாடம்.இருக்கிறது!

பழநியப்பனின் முன்னோர்கள் இசைக் கலைஞர்கள்.பி.யு.சி படித்துவிட்டு ஆசிரியர் வேலைக்கு காத்திருந்த காலத்தில்தான் அவருக்கு உணவகம் துவங்கும் ஆசை வந்திருக்கிறது! சிலவருடங்கள் நண்பர்கள் உதவியுடன் உணவகத்தை துவங்கினார் பழநியப்பன்.அவரது கைபக்குவத்துக்கு வாடிக்கையாளர்கள் தேடி வந்தார்கள். திரும்பத்திரும்ப வந்தார்கள். 

பழநியப்பன் கல்லாவில் ஊழியர்களை உட்கார வைத்துவிட்டு, தானே கிச்சனில் நின்று கரண்டி பிடித்தார்.அதுதான் அவர் செய்த தவறு.தனது கைபக்குவம்,சுவை ரகசியங்கள் வெளியே போகக்கூடாது என்று இவர் கிச்சனில் நின்று  சமையத்ததில்  கல்லாவில் உட்கார வைக்கப்பட்டவர்கள் கடையை சாப்பிட்டு விட்டார்கள்.

food

வீட்டை விற்குமளவிற்கு கடன்பட்ட பிறகுதான் அவர் தன் தவறை புரிந்து கொண்டார்.தானே கல்லாவில் உட்கார்ந்து சமையல் கட்டில் நிற்கும் ஆட்களுடன் தனது ரகசியங்களை பகிர்ந்து கொண்டார்.கடை வளர்ந்தது.இன்று தமிழகத்தின் முக்கியமான உணவகங்களில் ஒன்றாகிவிட்டது-’பழனியப்பா மெஸ்’ 

பழநியப்பனின் மக்களும் இன்று தந்தைக்கு தோள் கொடுக்கிறார்கள்.அறு சுவை மட்டும் போதாது!உணவகத்தில் அன்பும் உபசரிப்புமாக எட்டுச்சுவைகள் இருக்க வேண்டும் என்கிறார் அவர்.அரசு மருத்துவ மனைக்கு அருகில்தான் அமைந்திருக்கிறது மெஸ்.ஆனால் புதுக்கோட்டையில் எங்கே கேட்டாலும் வழி சொல்வார்கள்.

புதுக்கோட்டையில் சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள் மிகவும் குறைவு.அதனால் பழநியப்பா மெஸ்ஸில் சாப்பிடாதவர்கள் புதுக்கோட்டையில் இருக்க முடியாது.உள்ளே நுழைந்ததும் உங்களை குடும்பமே வரவேற்கும்.இரண்டு ஏ.சி அறைகள் இருந்தாலும் நடுவில் கொஞ்சம் அரை இருட்டாக இருக்கும் ஹாலில் உட்காருங்கள்.சாப்பாடு,பிரியாணி, கோதுமை புரோட்டாதான் மதிய உணவாக தருவார்கள். மட்டன் குழம்பு,மீன் குழம்பு,இறால் குழம்பு,சிக்கன் குழம்பு,கீரை,ரசம் இதுதான் ரெகுலர் மெனு.மற்ற ஐட்டங்கள் ஒரு பெரிய தட்டில் அடுக்கப்பட்டு வரும் .நீங்கள் உங்களுக்கு பிடித்த சைட் டிஷ்களை வாங்கிக் கொள்ளலாம்.

எல்லாமே சிறப்பாக இருக்கும் என்றாலும் மூன்று ஐட்டங்கள் மிகவும் புகழ் பெற்றவை.கறிக்கோலா உருண்டை. பொடிமீன்,மீன் தலைகறி.கோலா உருண்டையைக்கூட நீங்கள் பல இடங்களில் சாப்பிட்டு இருக்கலாம்,மற்ற இரண்டும் நிச்சயம் புதிய சுவையாக இருக்கும்!மீன்களை சிறு துண்டுகளாக வெட்டி மசாலா கலந்து அதில் முட்டையின் வெள்ளைகருவை மட்டும் சேர்த்து, அத்துடன் அரிசி மாவைச் சேர்த்து பிசைந்து, சற்று நேரம் வெய்யிலில் உலர்த்திவிட்டு பொரித்துத் தருகிறார்கள். அலாதியான் புதிய சுவை அது.

menu

அடுத்தது மீன் தலைக்கறி.கோலா,பாறை வஞ்சிரம் போன்ற மீன்களின் தலையை முழுதாக போட்டு குழம்பு செய்திருப்பார்கள்.இளகிய மனமுள்ளவர்களுக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும்.ஆனால் கொஞ்சம் பிய்த்து வாயில் போட்டதும் எல்லா தயக்கமும் போய்விடும்.அப்படி ஒரு தனித்த சுவை.நீங்கள் சாப்பிட சாப்பிட மீன்குழம்பை அதன் மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கொண்டே இருப்பார்கள்!

இந்த உணவகத்தின் முக்கியமான சிறப்பு இவர்கள் பயன் படுத்தும் மசாலாக்கள்.குழம்பு,வருவல்,பிறட்டல் என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மசாலாக்கள்.கோழி இறைச்சியை சுத்தம் செய்ய மோரை பயன்படுத்துகிறார்கள். மெஸ்ஸுக்குள் நுழையும் வழியில் ஒரு பலகையில் இன்று என்னென்ன மீனை சமைத்திருக்கிறோம் என்று எழுதி வைத்திருப்பார்கள்.நிச்சயம் அதில் பாதிக்குமேல் நீங்கள் கேள்வியே படாத பெயர்களாய் இருக்கும்!

காலையில்,இடியாப்பம்,புட்டு,தேங்காய் பால்,ஆட்டுக்கால் சூப் என்று ஒரு தனியாவர்த்தனம் நடக்கும் .முக்கியமான ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். சாப்பிடும் போது இந்தக் கீரைய சாப்பிடுங்க,ஒரு கை சோறு போட்டு ரசம் தரட்டுமா என்று கொஞ்சம் கண்டிப்பான குரலில் உபசரிப்பார்கள்.நீங்களும் வழக்கதைவிட ஒரு பிடி சோறாவது சேர்த்தே சாப்பிடுவீர்கள்.

இந்த பழனியப்பா மெஸ்ஸுக்கு ‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கி ஏகப்பட்ட அரசியல் பிரபலங்கள்,சினிமாவில் இயக்குனர் அமீர் தொடங்கி பலர் அங்கு ரெகுலர் கஸ்டமர்கள்.

நீங்களும் எப்போதாவது அந்தப்பக்கம் போவதாக இருந்தால் உள்ள புகுந்து ஒரு வெட்டு வெட்டிட்டு போங்க! லைஃப்ல மறக்க மாட்டிங்க!