புதிய விமானங்கள், மலிவு விலையில் விமான சேவை; இண்டிகோ அதிரடி!

 

புதிய விமானங்கள், மலிவு விலையில் விமான சேவை; இண்டிகோ அதிரடி!

இண்டிகோ விமான நிறுவனம் புதிய விமான வழித்தடங்களையும், பதினான்கு கூடுதல் உள்நாட்டு விமான இணைப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது

புதுதில்லி: இண்டிகோ விமான நிறுவனம் புதிய விமான வழித்தடங்களையும், பதினான்கு கூடுதல் உள்நாட்டு விமான இணைப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முன்னணி பயணிகள் விமான சேவை அளிக்கும் நிறுவனமான இண்டிகோ, மூன்று புதிய விமான வழித்தடங்களையும், பதினான்கு கூடுதல் உள்நாட்டு விமான இணைப்புகளையும் மலிவு விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, சென்னை-ராய்பூர், ஹைதராபாத்-கோரக்பூர், மற்றும் கொல்கத்தா-கோரக்பூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் புதிய விமானங்களை வருகிற ஏப்ரல் மாதம் முதல் இந்நிறுவனம் இயக்கவுள்ளது. இதனுடன் சேர்த்து, சென்னை-திருவனந்தபுரம், பெங்களூரு-மங்களூரு, பெங்களூரு-உதய்பூர், மற்றும் பெங்களூரு-உதய்பூர் உள்ளிட்ட பதினான்கு கூடுதல் உள்நாட்டு விமான இணைப்புகளையும் வருகிற ஏப்ரல் மாதம் முதல் இந்நிறுவனம் வழங்கவுள்ளது.

இந்த சேவைகள் அனைத்தையும் டிக்கெட் விலை ஒன்றுக்கு ரூ.2,073 முதல் ரூ.5199 வரை என மலிவு விலையில் அந்நிறுவனம் பயணிகளுக்கு வழங்கவுள்ளது. சென்னை-பெங்களூரு இடையேயான விமான சேவைக்காக டிக்கெட் விலையானது, அனைத்தையும் சேர்த்து ரூ.2,073 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹைதராபாத்-கோரக்பூர், மற்றும் கொல்கத்தா-கோரக்பூர் இடையேயான புதிய வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களுக்கான அறிமுக விளம்பர டிக்கெட் கட்டணம் ரூ.2,599 எனவும், சென்னை-ராய்பூர் இடையே ரூ.2,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

indigo

இந்த விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவுகளை இண்டிகோ நிறுவனத்தின் இணையதளத்தில் goindigo.in இன்று முதல் மேற்கொள்ளலாம்.

அதேசமயம், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட் கட்டணம் முறையே ரூ.1,199, ரூ.4,999 என்ற சலுகை விலையில் மார்ச் 15-ம் தேதி (இன்று) வரை கோ ஏர் விமான நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல், ஜெட்ஏர்வேஸ் நிறுவனமும் உள்நாட்டு விமான பயணங்களுக்கு சலுகை விலையில் டிக்கெட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, 37 இடங்களுக்கு ஆரம்ப சலுகை விலையாக ரூ.1,165 முதல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.