புதிய டி.வி., சேனல் தொடங்குகிறார் ரஜினி..தலைமை பொறுப்பில் ரங்கராஜ் பாண்டே?

 

புதிய டி.வி., சேனல் தொடங்குகிறார் ரஜினி..தலைமை பொறுப்பில் ரங்கராஜ் பாண்டே?

புதிய கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அதற்கு முன்னதாக புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சென்னை: புதிய கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அதற்கு முன்னதாக புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டிலிருந்தே அரசியலுக்கு வருவதாகச் சொல்லப்பட்டு வந்த ரஜினி கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்தார். அப்போது, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும் போது களம் காணுவோம் என்றும் அறிவித்தார். தொடர்ந்து, ரஜினி ரசிகர் மன்றம், ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

எனினும், தற்போது வரை கட்சி தொடங்கப்படவில்லை. ஆனால் அடிமட்ட அளவிலான பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஜினிகாந்த் புதியதாக தொலைக்காட்சி சேனல் தொடங்கவுள்ளதாகவும், அதன் தலைமை பொறுப்பு தந்தி தொலைக்காட்சியில் இருந்து ராஜினாமா செய்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவிற்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் அச்சிடப்பட்ட லெட்டா் பேட் மூலம் டிரேட்மார்க் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட தடையில்லா சான்றிதழ் இணையத்தில் பரவி வருகிறது.

அதில், சூப்பா் ஸ்டாா் டிவி, ரஜினி டிவி, தலைவா் டிவி ஆகிய மூன்று பெயர்களை பதிவு செய்ய அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் ரஜினி மன்ற தலைமைக் கழக நிர்வாகியான வி.எம்.சுதாகர் பெயரில், சி.பிரகாஷ் என்பவர் விண்ணப்பித்துள்ளார். மேற்கண்ட பெயர்களில் டிவி சேனல்கள் தொடங்குவதற்கு எனக்கு (ரஜினிகாந்த்) எந்தவித ஆட்சேபனையும் இல்லை அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

இந்த லெட்டர் பேடில் ரஜினிகாந்த் கையெழுத்திட்டுள்ளார். ஆனால், அந்த கையெழுத்து ரஜினிகாந்த் உடையது தானா என்பது தற்போது வரை உறுதிப்படுத்தப்படவில்லை. அதே போல், மக்கள் மன்றம் சாா்பாகவும் இது தொடா்பான உறுதிபடுத்தப்பட்ட தகவல் வெளியாகவில்லை.