புதிய சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமனம்

 

புதிய சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமனம்

சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது

டெல்லி: சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையேயான பனிப்போர் முற்றியுள்ளது. தொழிலதிபர் மொயின் குரேஷி தொடர்பான ஒரு வழக்கில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேபோல், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக ராகேஷ் அஸ்தானாவும் குற்றம் சாட்டியுள்ளார்.  நாட்டின் மிகப் பெரிய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் உயர்பதவி வகிக்கும் இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே,  சிபிஐ தலைமை அலுவலகத்திலேயே சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், ராகேஷ் அஸ்தானா மீதான ஊழல் புகார் தொடர்பாக, மொயின் குரேஷி தொடர்பான வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த போலீஸ் துணை கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் கைது செய்யப்பட்டார்.

சிபிஐ அமைப்புக்குள் இருக்கும் உச்சபட்ச அதிகாரிகளுக்கு மத்தியில் பிரச்னை எழுந்த நிலையில், இருவருக்கும் பிரதமர் மோடி சம்மன் அனுப்பினார். இதையடுத்து சிபிஐ இயக்குநர் பிரதமரை கடந்த ஞாயிற்றுக் கிழமை சந்தித்தார். தொடந்து, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் சிபிஐ-யின் புதிய இயக்குநராக நாகேஸ்வர் ராவை தாற்காலிகமாக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.