புதிய சாதனை படைத்த முகேஷ் அம்பானி நிறுவனம்! சென்செக்ஸ் 110 புள்ளிகள் உயர்ந்தது

 

புதிய சாதனை படைத்த முகேஷ் அம்பானி நிறுவனம்! சென்செக்ஸ் 110 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் இன்று முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடி என்ற மைல்கல்லை எட்டி சாதனை படைத்தது. சென்செக்ஸ் 110 புள்ளிகள் உயர்ந்தது.

சமீப காலமாக இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. இன்றும் இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. மேலும், இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை எட்டிய முதல் நிறுவனம் என்ற சாதனையை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் படைத்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில் இண்டஸ்இந்த் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, யெஸ் பேங்க், டாடா ஸ்டீல், ஸ்டேட் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் எல் அண்டு டி உள்பட 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஹீரோ மோட்டோகார்ப், எச்.டி.எப்.சி., பஜாஜ் ஆட்டோ, மாருதி, டாடா மோட்டார்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்கு வர்த்தகம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,283 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,201 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 196 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. பங்கு வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.155.59 லட்சம் கோடியாக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தை

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 109.56 புள்ளிகள் உயர்ந்து 41,130.17 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 50.45 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,151.15 புள்ளிகளில் முடிவுற்றது.