புதிய சரித்திரம் படைத்த பி.வி.சிந்துவுக்கு குவியும் பாராட்டு

 

புதிய சரித்திரம் படைத்த பி.வி.சிந்துவுக்கு குவியும் பாராட்டு

உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரின் இறுதி சுற்று போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்

குவாங்சோவ் (சீனா): உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரின் இறுதி சுற்று போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

உலக பேட்மிண்டன் தரவரிசையில் 8 முன்னணி வீரர்-வீராங்கனைகள் பற்கேற்று விளையாடும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடர் சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் நடைபெற்றது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டங்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்ற இந்தியாவின் பி.வி.சிந்து, அரையிறுதி போட்டியில், தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் இன்டானனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, முன்னாள் உலக சாம்பியனும், 5-வது இடம் வகிக்கும் வீராங்கனையுமான ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார்.

மொத்தம் 62 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த ஆட்டத்தின் முடிவில் 21-19, 21-17 என்ற நேர் செட்டில் ஒகுஹராவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கி புதிய வரலாறு படைத்தார் சிந்து. முந்தைய காலங்களில், சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் என்ற பெயரிலும், தற்போது உலக டூர் இறுதி சுற்று என்ற பெயரில் நடத்தப்படும் இந்த போட்டியில், இந்தியர் ஒருவர் பட்டத்தை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து சிந்து கூறுகையில், அழகான வெற்றியுடன் இந்த ஆண்டை நிறைவு செய்திருப்பது உண்மையிலேயே பெருமிதம் கொள்ளும் வகையில் உள்ளது. மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. இறுதிப்போட்டிகளில் ஏன் எப்போதும் தோற்று கொண்டு இருக்கிறீர்கள் என்று மக்கள் அடிக்கடி என்னிடம் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தார்கள். அதனால் தான் நானும் எனக்குள் இறுதிப்போட்டியில் தோற்பது ஏன் என்று கேட்க வேண்டி இருந்தது. இவற்றுக்கு ஒரு வழியாக இப்போது விடை கிடைத்து விட்டது என்றார்.

வரலாற்று சாதனை புரிந்த பி.வி.சிந்து, தேசத்திற்கு பெருமை சேர்த்து தந்துள்ளார் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட ஏராளமானோர் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.