புதிய கூட்டணி? ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன் சந்திப்பு

 

புதிய கூட்டணி? ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன் சந்திப்பு

தெலங்கானா ராஷ்டிர சமிதி செயல் தலைவரும், சந்திரசேகர ராவின் மகனுமான கே.டி.ராமா ராவ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார்

ஹைதராபாத்: தெலங்கானா ராஷ்டிர சமிதி செயல் தலைவரும், சந்திரசேகர ராவின் மகனுமான கே.டி.ராமா ராவ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான அணியை பலப்படுத்தும் முயற்சிகளில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார்.

இது தவிர பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியும் தயாராகி வருகிறது. மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து 3-வது அணி ஒன்றை அமைத்து தேர்தலை சந்திக்கும் நோக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் களமிறங்கியுள்ளார்.

இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் சென்னையில் முக ஸ்டாலின், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்த அவர், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தனி குழுவையும் அமைத்தார்.

இந்நிலையில், தெலங்கானா ராஷ்டிர சமிதி செயல் தலைவரும், சந்திரசேகர ராவின் மகனுமான கே.டி.ராமா ராவ் தலைமையிலான அக்கட்சியின் மூத்த தலைவர்கள், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கூட்டணி அமைப்பதற்கு ஆதரவு தரும்படி அவர்கள் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.