புதிய காற்றழுத்தம் காரணமாக இன்று முதல் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு

 

புதிய காற்றழுத்தம் காரணமாக இன்று முதல் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு

தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யத் தொடங்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யத் தொடங்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுப்பெறும் எனவும், இதனால், கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யத் தொடங்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளையும், நாளை மறுநாளும் உள்மாவட்டங்களில் மழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மைய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்

இதனிடையே நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இடிமின்னலுடன் பெய்தது. இதனால் சாலையோரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்தது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, சூரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழைப்பதிவானது. ஒரு மணி நேரம் பெய்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கருமேகங்கள் திரண்டு கனமழை கொட்டித்தீர்த்தது. ஒரு மணி நேரம் பெய்த மழையால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், சுமார் ஒரு மணி நேரம், கனமழை கொட்டித்தீர்த்தது.