பீர் பாட்டிலுடன் நடிப்பது சமூக அக்கறையா? நடிகர் விஷாலை வெளுத்து வாங்கிய பாமக!

 

பீர் பாட்டிலுடன் நடிப்பது  சமூக அக்கறையா? நடிகர் விஷாலை வெளுத்து வாங்கிய பாமக!

பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் விஷால் ‘சண்டக்கோழி 2’ படத்தை அடுத்து அயோக்யா படத்தில் நடித்து வருகிறார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்கும் இந்தப் படம் தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.

ayogya

இந்தப் படத்தில் போலீஸாக நடிக்கிறார் விஷால்.   இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில், கையில் பீர் பாட்டிலுடன் போலீஸ் ஜீப் மீது விஷால் அமர்ந்திருப்பது போல் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் அயோக்யா படத்தின் போஸ்டருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்  கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் அவர், ‘பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச்செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்!

‘அயோக்யா’ திரைப்படவிளம்பரத்தில் கதாநாயகர் விஷால் பீர் புட்டியுடன் தோன்றுகிறார். நடிகர் சங்க பொதுச்செயலர் என்ற முறையில் புகைக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதைத் தடை செய்ய வேண்டும் என கடிதம் எழுதினேன். இப்போது புகையை தாண்டி பீர் பாட்டிலுடன் நடிக்கிறார்.  என்னவொரு சமூகப் பொறுப்பு! ‘என்று கூறியுள்ளார்.

முன்னதாக சர்கார் திரைப்படத்தில் விஜய் புகைபிடிக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.