பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்த ஜார்க்கண்ட்…

 

பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்த ஜார்க்கண்ட்…

ஜார்க்கண்டில் பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ஜார்க்கண்ட் அரசும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயலாற்றி வருகிறது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, ஜார்க்கண்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45ஆக உள்ளது. மேலும் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.

புகையிலை பொருட்கள்

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. இது தொடா்பாக ஜார்க்கண்ட் மாநில தலைமை செயலர் (சுகாதாரம்) டாக்டர் நிதின் மதன் குல்கர்னி வெளியிட்டுள்ள உத்தரவில், மாநிலத்தில் பீடி, சிகரெட், பீடி, பான்மாசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகரெட்

பொது இடங்களில் எவரேனும் புகையிலையை துப்பினால் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ஜார்க்கண்ட் மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை எச்சரிக்கை செய்துள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்புவது கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆபத்தை அதிகரிக்கும் என குல்கர்னி தெரிவித்தார். அரசின் உத்தரவை யாரேனும் மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க லோக்கல் நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.