பீகார், அசாம், வடமாநிலங்களில் கனமழை, வெள்ளம்!

 

பீகார், அசாம், வடமாநிலங்களில் கனமழை, வெள்ளம்!

அசாமில் மொத்தமுள்ள‌ 32 மாவட்டங்களில், 28 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பார்பேட்டா மாவட்டம் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் அத்தியாவசிய தேவைகள் கிடைக்கப்பெறாமல் அவதியுற்றுள்ளனர்.

கனமழை, வெள்ளம் காரணமாக பீகார் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் லட்சக்கணக்கான  மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அசாமில் மொத்தமுள்ள‌ 32 மாவட்டங்களில், 28 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பார்பேட்டா மாவட்டம் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் அத்தியாவசிய தேவைகள் கிடைக்கப்பெறாமல் அவதியுற்றுள்ளனர். பிரும்மபுத்திரா மற்றும் கிளை நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு அபாயகட்டத்தை தாண்டி ஓடுகிறது. மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை அறிவிப்பு தெரிவித்துள்ள நிலையில் தாழ்வான பகுதிகள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Nitish examining floods

அதேப்போல், கடந்த 2 நாட்களாக திரிபுரா, மிசோரம் மாநிலங்களில் பெய்துவரும் மழையால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் முகாமிட்டுள்ளனர். நேபாளத்தில் பெய்யும் கனமழையால், அங்கு உற்பத்தியாகும் ஆறுகள் பீகாரில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. கிழக்கு சாம்ப்ரான், மதுபானி, அராரியா, கிருஷ்ணகஞ்ச் உள்ளிட்ட மாவட்டங்களில் 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அராரியா மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வெள்ளச்சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனிடையே, இன்னும் நான்கு நாட்களுக்கு பீகாரில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மேலும் வெள்ள அபாயம் ஏற்படும் சூழல் எழுந்துள்ளது.