பீகாரில் 30 ஆண்டுகளாக ஒரே சமயத்தில் 3 அரசு வேலைகளில் வேலை பார்த்த பலே கில்லாடி….

 

பீகாரில் 30 ஆண்டுகளாக ஒரே சமயத்தில் 3 அரசு வேலைகளில் வேலை பார்த்த பலே கில்லாடி….

பீகாரை சேர்ந்த சுரேஷ் ராம் 1988ல் கிஷான்கன்ஞ் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் ஜூனியர் என்ஜினீயராக அரசு பணியில் சேர்ந்தார். அதற்கு அடுத்த ஆண்டு நகர நீர் வளத் துறையிடம் இருந்து அவருக்கு பணியில் சேருமாறு அவருக்கு கடிதம் வருகிறது. அதற்கு சில நாட்களில் அதே பதவிக்கு அதே மாதிரியான கடிதம் வருகிறது. நிர்வாக குளறுபடியால் இந்த கடிதங்கள் வந்துள்ளது. இதனை சுரேஷ் ராம் தனக்கு சாதமாக பயன்படுத்தி கொண்டார்.

நீர் வளத்துறையிடம் இருந்து வந்த 2 கடிதங்களையும் பயன்படுத்தி பாங்கா மாவட்டத்தின் பெல்ஹார் தொகுதி மற்றும் சுபாலின் பீம்நகா கிழக்கு கடற்கரையில் உள்ள அந்த  2 பணிகளிலும் சேர்ந்தார். சுமார் 30 ஆண்டுகளாக அந்த 3 அரசு வேலைகளிலும் வேலை பார்த்து 3 சம்பளத்தை வாங்கி வந்துள்ளார். இதில் சுவராஸ்யமான சம்பவம் என்னன்னா 3 வேலையிலும் சுரேஷ் ராம் தொடர்ந்து முன்னேறியதுதான். 

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல்,  பீகார் அரசின் விரிவான நிதி நிர்வாக அமைப்பு (சி.எப்.எம்.எஸ்.) சுரேஷ் ராம் ஒரே நேரத்தில் 3 அரசு பணிகளில் வேலை பார்த்து 3 சம்பளங்களை பெற்று வந்ததை கண்டு பிடித்தது. அரசின் வருவாய், செலவு மற்றும் சொத்துக்களை முறைப்படுத்த பயன்படுத்தும் நிதி நிர்வாக அப்ளிகேஷன்தான் சி.எப்.எம்.எஸ்.

கிஷான்கன்ஞ் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் துறையின் செயல் பொறியாளர் மதுசுதன் குமார் கர்னா கூறுகையில், கடந்த ஜூலை 22ம் தேதி துணை செயலர் தனது ஆவணங்களை பாசனத்துறைக்கு கொண்டு வரும்படி ராமிடம் கூறினார். ஆனால் அவர் அதனை காட்டவில்லை. இதனையடுத்து ராமுக்கு எதிராக கிஷான்கன்ஞ் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது என கூறினார். சுரேஷ் ராம் தற்போது தலைமறைவாக இருப்பதாக தகவல். 

30 ஆண்டுகளாக ஒரு நபர் 3 அரசு பணிகளில் ஒரே சமயத்தில் வேலை பார்த்து சம்பளங்களை வாங்கி இருப்பது பீகார் அரசு நிர்வாகம் குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.