பி.எஸ்.6 விதிமுறை அமலுக்கு வருவதற்கு முன்பே 5 லட்சம் கார்கள் விற்பனை! சாதனை படைத்த மாருதி சுசுகி……

 

பி.எஸ்.6 விதிமுறை அமலுக்கு வருவதற்கு முன்பே 5 லட்சம் கார்கள் விற்பனை! சாதனை படைத்த மாருதி சுசுகி……

பி.எஸ்.6 வகை கார்களை அறிமுகம் செய்த 10 மாதத்துக்குள் மாருதி சுசுகி 5 லட்சம் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல்தான் பி.எஸ்.6 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வர உள்ளது.

சுற்றுப்புறச்சூழல் மற்றும் காற்று மாசு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பி.எஸ்.4 ரக வாகனங்களை 2020 மார்ச் 31ம் தேதிக்கு பிறகு தயாரிக்க, விற்பனை செய்ய வாகன நிறுவனங்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பி.எஸ்.6 ரக வாகனங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என வாகன நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

மாருதி டிசையர்

இதனையடுத்து அனைத்து வாகன நிறுவனங்களும் மெல்ல மெல்ல பி.எஸ்.6 ரக வாகனங்கள் தயாரிப்புக்கு மாறி வருகின்றன. நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி விதிமுறை அமலாவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே,  கடந்த ஏப்ரல் மாதம் முதலாவதாக பி.எஸ்.6 காரை அறிமுகம் செய்து விற்பனையை தொடங்கியது. மாருதி சுசுகி நிறுவனம் தற்போது அல்டோ, எக்கோ, எஸ்-பிரஸ்ஸோ, செலிரியோ, வேகன்-ஆர், பலேனோ, டிசையர், எர்டிகா மற்றும் எக்ஸ்.எல்.6 உள்ளிட்ட மாடல்களில் பெட்ரோல் ரகத்தில் பி.எஸ்.6 கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

அல்டோ

பி.எஸ்.6 வகை கார்களை விற்பனை செய்ய தொடங்கிய 10 மாதத்துக்குள், மாருதி நிறுவனம் மொத்தம் 5 லட்சம் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது குறித்து மாருதி சுசுகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெனிச்சி அயுகாவா கூறுகையில், எங்களது வெகுஜன தயாரிப்புகளில் பி.எஸ்.6 தொழில்நுட்பத்தை முன்கூட்டியே ஏற்றுக்கொண்ட எங்களது வாடிக்கையாளர்களுக்கு நன்றி. முன்கூட்டியே பி.எஸ்.6 இணக்கமான என்ஜின்களை எங்களது பிரபலமான தயாரிப்புகளில் அறிமுகம் செய்தது, மத்திய அரசின் தொலைநோக்கு பார்வை மற்றும் பசுமையான சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றில் எங்களது பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது என தெரிவித்தார்.