பி.எஸ்.6 வாகனங்களை மட்டுமே கொடுங்க…… வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்த டீலர்கள்

 

பி.எஸ்.6 வாகனங்களை மட்டுமே கொடுங்க…… வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்த டீலர்கள்

பி.எஸ்.6 வாகனங்களை மட்டுமே டீலர்களுக்கு சப்ளை செய்யுங்க என வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் வாகன டீலர்கள் சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

வாகனங்கள் வெளியிடும் புகை அளவை குறைக்கும் மற்றும் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் பி.எஸ்.6 ரக என்ஜின் வாகனங்களுக்கு மாறும்படி வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பி.எஸ்.6 ரக மாடல் வாகனங்களை மட்டுமே தயாரிப்பு மற்றும் விற்பனை செய்ய வேண்டும் என்ற விதிமுறை அமலில் வர உள்ளது.

பி.எஸ்.6 கார்கள்

இந்த சூழ்நிலையில், பி.எஸ்.4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான காலஅவகாசத்தை நீடிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வாகன டீலர்கள் சங்க கூட்டமைப்பு மனு தாக்கல் செய்தது. ஆனால் அதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனையடுத்து பி.எஸ்.6 வாகனங்களை மட்டுமே டீலர்களுக்கு சப்ளை செய்ய வேண்டும் என்றும் பி.எஸ்.4 வாகனங்களுக்கு பில்லிங் செய்வதை நிறுத்த வேண்டும் இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு வாகன டீலர்கள் சங்க கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.

வாகன டீலர்கள்

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி தனது 70 சதவீத பெட்ரோல் வாகனங்களை பி.எஸ்.6க்கு மாற்றி விட்டது. டொயோட்டா நிறுவனமும் பி.எஸ்.6 கார்களை சப்ளை செய்ய தொடங்கி  விட்டது.  ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனமும் தனது இரண்டு ஆலைகளையும் பி.எஸ்.6 விதிமுறைக்கு ஏற்ப மாற்றி விட்டதாக அறிவித்து விட்டது. ஹூண்டாய், மகிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களும் குறிப்பிட்ட மாடல் வாகனங்களை பி.எஸ்.6 ரகத்துக்கு மாற்றி விற்பனை செய்து வருகின்றன.