பிளாஸ்டிக் தடையை மீறினால் அபராதம் விதிக்கும் மசோதா இன்று தாக்கல்

 

பிளாஸ்டிக் தடையை மீறினால் அபராதம் விதிக்கும் மசோதா இன்று தாக்கல்

பிளாஸ்டிக் தடையை மீறினால் அபராதம் விதிப்பதற்கு வழி வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது

சென்னை: பிளாஸ்டிக் தடையை மீறினால் அபராதம் விதிப்பதற்கு வழி வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் விவாதத்தின் போது, 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, கடந்த மாத தொடக்கத்தில் இருந்து மறுசுழற்சி செய்ய முடியாத ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம், பிளாஸ்டிக் தடையில் இருந்து பால், தயிர், எண்ணைய் பாக்கெட்டுகள், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோருக்கு அதிக அளவில் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிளாஸ்டிக் தடையை மீறினால் அபராதம் விதிப்பதற்கு வழி வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.