பிளாஸ்டிக்குக்கு தடை; அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்

 

பிளாஸ்டிக்குக்கு தடை; அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்

பிளாஸ்டிக்குக்கு தடை என்ற உத்தரவை தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: பிளாஸ்டிக்குக்கு தடை என்ற உத்தரவை தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 2019 ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க கூடாது என பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் தடை உத்தரவை உடனடியாக அமல்படுத்தாமல், அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.  அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும்பிளாஸ்டிக் பொருட்கள் பலமில்லியன் டன் உணவு தானியங்கள், உணவு பொருட்கள் பாதுகாப்பு, இரத்த உறைகள், இரத்தம்பாதுகாப்பு, கண்ணிற்குகாண்டாக்ட்லென்ஸ், இதயத்தில் பொருத்தப்படும் பேஸ்மேக்கர், செயற்கை மூட்டுபோன்று உடலோடும் உயிரோடும் இரண்டற கலக்ககூடிய சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் பாதுகாப்பில் இன்றியமையாத பலன்களை அளித்துவருகிறது.

தமிழகத்தின் மொத்த பொருளாதாரத்தில் சிறு வியாபார தொழில்கள் மூலம்நிகழும் வியாபாரம் 25%. இவற்றின் வளர்ச்சியில் பிளாஸ்டிக் பையின் உபயோகம் இன்றியமையாதது. மேலும் பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பது என்பது ஒரு குடிசை தொழில் போல, பல லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. ஏறக்குறைய இரண்டு லட்சம் தொழிலாளர்கள் நேரிடையாகவும், மூன்று லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

மக்கி போக முடியாத பொருட்களை மறு சுழற்சி மூலம் பயன்பாட்டுக்கு உட்படுத்துவதே அறிவியலின் வளர்ச்சி; பொருளாதார முன்னேற்ற பாதை. குறைந்த செலவில் பிளாஸ்டிக் பைப்பாகவும், கட்டிட தொழிலுக்கு முக்கிய இடு பொருளாகவும், தார்சாலையாகவும் உருமாறி நீண்ட நாள் உழைக்க கூடிய பொருளை தகுதியான உபயோகத்திற்கு பயன்படுத்துவது நன்மை அளிக்கும். நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உட்பட பல்வேறு அயல் மாநிலங்களுக்கும்,  பிளாஸ்டிக் விற்பனையில் தமிழகம் மிக பெரிய சந்தையாகஉள்ளது. அங்கெல்லாம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இல்லை.

தமிழகத்திற்கு கிடைக்கக்கூடிய ஜிஎஸ்டி வருவாய் ரூ.1500 கோடியும், TNEB வருவாய் ரூ.500 கோடியும் பிளாஸ்டிக் தொழில் மூலமாகவே கிடைக்கிறது. பலகோடி வருமானம் ஈட்டக்கூடிய இத்தொழில் அரசாங்கத்தின் இந்த முடிவால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கான முக்கிய உதாரணமாக, இந்தியாவிற்கே முன்னோடியாக முதன்முதலாக தமிழகத்தின் கரூர் மாவட்ட நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்ட CMR Bitplast – Wet Process(ஈரச்செயல்முறை) யைக்கொண்டுபிளாஸ்டிக்மூலம்காதப்பாறைஊராட்சி NH7 சாலை முதல் கொங்குப் பள்ளிவரையில் இருதரமான சாலைகள், நீண்டகாலம் உழைக்க கூடியதாகவும், உறுதியாகவும் அமைக்கப்பட்டதைகூறலாம். இந்தியச்சாலை கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற இந்த தொழில்நுட்பத்தின்மூலம், அன்னிய செலவாணி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது, சுற்று சூழல் பாதுகாக்கப்பட்டுள்ளது, பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து வழங்குவதால் சுய உதவி குழுக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது.

நெகிழியின் பாலிமர் வகை, அதன்தன்மை, பொது பயன்பாடுகள், மறு சுழற்சி செய்யும் முறைகள் என நெகிழிகள் தன்மைக்கேற்றவாறு பிரிக்கப்பட்டு உலக அளவில் மறு சுழற்சி செய்யப்பட்டு தேவைக்கேற்ற பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில், உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும், வாடிக்கையாளர்களும், ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட வணிக சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க, நம்மிடம் இருக்கும் தொழில் நுட்பத்தை முறையாக கையாண்டு ஆராய்ச்சியாளர்களையும், உற்பத்தி நிறுவனங்களையும் ஊக்குவித்து முழுமையாக பிளாஸ்டிக் தடை என்றில்லாமல், ஆக்கப்பூர்வமாக அவற்றின் பயன்பாடுகளை நாம் அனுபவிக்கவேண்டும்.

மேலும், தவிர்க்க முடியாத சூழலில் உற்பத்தி நிறுவனங்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டு, வேறொரு தொழிலுக்கு அந்நிறுவனங்களும், ஊழியர்களும் மாறியபிறகு பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த வேண்டும் எனவும், பொருளாதார நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு தமிழக அரசு தனது தடை உத்தரவினை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என வலியுறுத்தியுள்ளார்.